குண்டும் குழியுமான படகு இல்ல சாலை; வாகன ஓட்டிகள் திணறல்
ஊட்டி; ஊட்டி படகு இல்லம் சாலை குண்டும், குழியுமாக காட்சியளிப்பதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர். ஊட்டியில் இருந்து படகு இல்லா சாலையில் அரசு பஸ் உள்ளூர் வாகனங்கள் சுற்றுலா வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன. தவிர, தீட்டுக்கல், குருத்துகுளி, மேல் கவ்வட்டி, கீழ் கவ்வட்டி, நஞ்சநாடு, முள்ளிகொரை உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வருகிறது. இந்நிலையில், ஊட்டி ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் இருந்து படகு இல்லம் வரை சாலையில் ஆங்காங்கே குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. சில இடங்களில் பெரிய அளவிலான பள்ளம் ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு இடையே வாகனங்களை இயக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இரண்டாவது சீசன் துவங்க உள்ள நிலையில் சுற்றுலா பயணியர் அதிகளவில் படகு இல்லத்திற்கு வர உள்ளதால், நகராட்சி நிர்வாகம் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மேலும், முள்ளிகொரை சாலையும் குளம் போல மாறி உள்ளதால், இரவில் வாகனங்களை இயக்க மக்கள் முடியாமல் பாதிக்கப்படுகின்றனர். மக்கள் கூறுகையில்,' நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள இந்த இரண்டு சாலைகளும் சீரமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. எனவே, இதனை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.