உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டி அருகே காட்டு குப்பை பகுதியில் நடக்கும் மின் திட்ட பணி ஜரூர்! அணையில் இருந்து 70 அடி தண்ணீரை வெளியேற்ற திட்டம்

ஊட்டி அருகே காட்டு குப்பை பகுதியில் நடக்கும் மின் திட்ட பணி ஜரூர்! அணையில் இருந்து 70 அடி தண்ணீரை வெளியேற்ற திட்டம்

ஊட்டி: ஊட்டி அருகே, குந்தா நீரேற்று மின் திட்டப்பணிக்காக எமரால்டு அணையில், 70 அடி வரை தண்ணீர் வெளியேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. ஊட்டி அருகே, காட்டு குப்பை பகுதியில், 1,850 கோடி ரூபாயில், 4 பிரிவுகளாக மின் திட்ட பணிகள் நடந்து வருகிறது. ஒரு பிரிவில், 125 மெகாவாட் வீதம், 500 மெகாவாட் மின் உற்பத்திக்கான, குந்தா நீரேற்று மின் திட்ட பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. 2 கி.மீ., துாரம் சுரங்கப்பாதை அமைக்கும் பணி முடிந்து கட்டுமான பணிகள் மற்றும் மின் சாதனங்கள் பொருத்துவது உள்ளிட்ட பணிகள், 60 சதவீதம் நிறைவடைந்துள்ளது. முதல் பிரிவுக்கான, 125 மெகாவாட் மின் உற்பத்தி பணி கடந்த, 2022 டிச., மாதம் நிறைவடைந்து உற்பத்தி துவக்கி இருக்க வேண்டும். ஆனால் , காட்டுகுப்பை பகுதியில் நிலவிய மாறுப்பட்ட கால நிலை; நிர்வாக பணியில் ஏற்பட்ட இடையூறுகளால் குறிப்பிட்ட காலத்தில் பணிகள் முடிக்காமல் இழுபறியான சூழ்நிலை நிலவுகிறது.

70 அடி வரை வெளியேற்ற திட்டம்

இந்நிலையில், சமீபத்தில் ஆய்வு மேற்கொண்ட மின் வாரிய உயர் அதிகாரிகள் பணிகளை விரைவுப்படுத்த உத்தரவிட்டனர். அதன்படி , குந்தா நீரேற்று மின் திட்டம் பணிகள் நடக்கும் பகுதியை ஒட்டியுள்ள எமரால்டு அணை நீர்பிடிப்பு பகுதிகளில், தண்ணீர் முழு கொள்ளளவில் உள்ளது.இந்த பணிகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க எமரால்டு அணையிலிருந்து, 30 நாட்கள் தினசரி வினாடிக்கு, 1000 கன அடி நீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு, கடந்த, 10ம் தேதி முதல் தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. கடந்த, 22 நாட்களாக வினாடிக்கு, 1000 கன அடி வீதம் தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டது.இதனால், எமரால்டு அணையில் இருந்து, 70 அடிவரை தண்ணீர் வெளியேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது வரை, 50 அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது.நிர்ணயித்த, 30 நாட்களில், இன்னும், 8 நாட்கள் இருப்பதால் தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து, மின் திட்ட அடுத்த கட்ட பணியை விரைவில் துவங்க மின் வாரியம் திட்டமிட்டுள்ளது.

வாரம்...!

குந்தா மேற்பார்வை செயற்பொறியாளர் முரளி கூறுகையில் , '' 500 மெகாவாட் மின் உற்பத்திக்கான, குந்தா நீரேற்று மின் திட்ட பணிகள் விரைவாக நடந்து வருகிறது. இப்பணிக்காக எமரால்டு அணையில் இருப்பில் உள்ள தண்ணீரில்,70 அடி தண்ணீரை வெளியேற்றினால் தான் பணிகளை மேற் கொள்ள முடியும். இதற்காக , கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக வினாடிக்கு, 1000 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இது வரை, 50 அடி வரை தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில், 20 அடி வரை தண்ணீர் வெளியேற்றப்பட உள்ளது. அதன் பின், அப்பர்பவானி அணையிலிருந்து எமரால்டு அணைக்கு தண்ணீர் கொண்டு வந்து, நீரேற்று திட்டத்திற்கான பணிகள் நடக்கிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை