வளரிளம் பருவத்தினரை அபாய தொழில்களில் ஈடுபடுத்தினால் சிறை: தொழிலாளர் துறை உதவி ஆணையர் எச்சரிக்கை
குன்னுார்; 'குழந்தைகளை பணியில் ஈடுபடுத்தல் மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களில் அமர்த்தினால் சிறை தண்டனை விதிக்கப்படும்,' என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.குன்னுார் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் சார்பில், ஆண்டு தோறும் ஜூன், 12ல் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதன்படி, மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமையில், கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில், குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி எடுக்கப்பட்டது. தொடர்ந்து, குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தொடர்பாக ஊட்டி, குன்னுார் உட்பட பல்வேறு பகுதிகளில், குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு குறித்து எடுத்துரைத்தல், துண்டு பிரசுரங்கள் விநியோகித்தல், கையெழுத்து இயக்கம், விழிப்புணர்வு பதாகைகள் வைத்தல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன.தொழிலாளர் உதவி ஆய்வர்கள், 'சைல்டு லைன்' அலுவலர்கள் மாவட்டத்தில், குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் பணியமர்த்தப்பட்டுள்ளது கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் குழந்தை தொழிலாளர் எவரும் கண்டறியப்படவில்லை என பதிவு செய்யப்பட்டது.குன்னுார் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தாமரை மணாளன் கூறுகையில்,''குழந்தைகளை பணியில் ஈடுபடுத்தல் மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட வளரிளம் பருவத்தினை அபாயகரமான தொழில்களில் அமர்த்தினால் குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் சட்டத்தின் கீழ், உரிமையாளருக்கு, 20,000 முதல் 50,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது இரண்டினையும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும். குழந்தை தொழிலாளர் குறித்து www.pencil.gov.inஎன்ற வலைதளம், தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலக எண் 0423 2232108, சைல்டு லைன் எண் 1098 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்,'' என்றார்.