நீலகிரி மாவட்டத்தில், 'கோடைமழை, தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை ,' என, மூன்று காலங்களில் பெய்கிறது. மாவட்டத்தின் சராசரி மழையளவு, 140 செ.மீ., ஆகும்.நடப்பாண்டில் ஏப்., இறுதிவரை கோடை மழை பெய்யவில்லை. மே, 4ம் தேதியிலிருந்து இரண்டு வாரங்கள் மழை பெய்தது. கோடை மழையின் சராசரி அளவு, 40 செ.மீ., அளவுக்கு, 25 செ.மீ., வரை மட்டுமே மழை பதிவாகியுள்ளது. காலம் தவறி பெய்த மழை
தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் துவங்கி மூன்று வாரங்கள் கடந்த நிலையில் மழை பொழிவு எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. தென்மேற்கு பருவமழை சராசரி அளவு, 60 செ.மீ., இதுவரை, 18 செ.மீ., மழை பெய்துள்ளது. நடப்பாண்டில் ஆறு மாதங்கள் கடந்த நிலையில் இதுவரை, 38 செ.மீ., மழை பெய்துள்ளது. ஆறு மாதங்களில், சராசரியாக, 60 செ.மீ., மழை பதிவாகி இருந்தால் மட்டுமே குடிநீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியும். மேலும், மலை காய்கறி மற்றும் தேயிலை தோட்டம் விவசாயத்திற்கு ஏற்ற சீதோஷ்ண நிலை கிடைத்திருக்கும். இந்நிலையில், நீலகிரியில் கடந்த சில ஆண்டுகளாக காலநிலையில் ஏற்பட்ட பெரும் மாற்றத்தால், பருவமழை காலம் தவறி பெய்து வருகிறது. இதன் காரணமாக அந்தந்த காலகட்டத்தில் சராசரியாக பெய்ய வேண்டிய பருவமழை காலம் தவறி ஒரே நேரத்தில் அதிகளவு பெய்வதால் பேரிடர் பாதிப்புகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால், எந்த பலனும் இல்லை. அதல பாதாளத்தில் அணைகள்
நடப்பாண்டில் இதுவரை, 38 செ.மீ., மழை பெய்துள்ளது. மழைக்கு ஓரளவு குடிநீர் தேவை பூர்த்தியானாலும், மாவட்டத்தில், 40 சதவீத பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. மலை காய்கறிகளை பொறுத்தவரை கிணற்று நீரை நாட வேண்டிய நிலை ஏற்படவில்லை. தேயிலை தோட்டங்களில் ஓரளவுக்கு சீதோஷ்ண நிலை கிடைத்தாலும் உரமிட்டு பராமரிக்கும் அளவுக்கு மழை பெய்யவில்லை. மின்நிலைய அணைகளை பொறுத்தவரை, 13 அணைகள், 30 தடுப்பணைகளில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு வரும் குந்தா, கெத்தை, மாயார், முக்குறுத்தி அணைகளை தவிர, எமரால்டு உட்பட பிற அணைகளில் தண்ணீர் அளவு சரிந்துள்ளது. எதிர்பார்த்த அளவு மின் உற்பத்தி மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மின்வாரியம் பருவ மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். பொதுவாக, ஆக., இறுதி வரை தென்மேற்கு பருவமழை பெய்யும் காலமாகும். பின், நவ., மாதம் துவங்கும் வடகிழக்கு பருவமழையுடன், சராசரியாக, 90 செ.மீ., எட்டினால் மட்டுமே, குடிநீர் தேவை, தடையின்றி மின் உற்பத்தி, மலை காய்கறி விவசாயம் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும் என்பதால், வரும் நாட்களில் சராசரியாக மழை தொடர வேண்டும் என விவசாயிகள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.