ஜமாபந்தியில் கோரிக்கை மனுக்கள்; உரிய நடவடிக்கைக்கு உத்தரவு
ஊட்டி; நீலகிரியில் நடந்த இரண்டு நாள் ஜமாபந்தியில் பொதுமக்களிடம் இருந்து, 1,870 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது.ஊட்டி, குன்னுார், குந்தா, கோத்தகிரி, கூடலுார், பந்தலுார் ஆகிய தாலுகா பகுதிகளில் நேற்று முன்தினம் துவங்கிய ஜமாபந்தி நேற்று நிறைவடைந்தது. 'முதல் நாள் ஜமாபந்தியில் பொதுமக்களிடமிருந்து மகளிர் உரிமை தொகை, முதியோர் உதவி தொகை; இலவச வீட்டு மனை பட்டா,' சாலை உள்ளிட்ட அடிப்படை தேவைகள் குறித்து, 817 மனுக்கள் பெறப்பட்டது. இரண்டாவது நாள் ஜமாபந்தியில் ஆறு தாலுகாவில், 1,053 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.மொத்தம், 1,870 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. 20 மனுக்கள் மீது அங்கேயே நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்கான உத்தரவு ஆணை வழங்கப்பட்டது. 'பிற மனுக்கள் அந்தந்த துறைக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, உத்தரவிட்டுள்ளனர்.