தடுப்பு சுவர் கற்களை எடுத்து சாலை சீரமைப்பு; மழை காலத்தில் மண் சரிவு ஏற்படும் அபாயம்
கூடலுார்; கூடலுார் கீழ்நாடுகாணி பகுதியில், சாலையோர தடுப்பு சுவரிலிருந்து கற்களை எடுத்து, தற்காலிக சாலை சீரமைப்பு பணிக்கு பயன்படுத்தி வருவதால், சாலையோரம் மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. கூடலுார், கோழிக்கோடு சாலை, நாடுகாணியில் இருந்து, கேரள மாநிலம் மலப்புரம், திருச்சூர், கோழிக்கோடு மாவட்டங்களுக்கு சாலை பிரிந்து செல்கிறது.தமிழகம்- கேரளா - கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் இச்சாலையில், வருவாய் துறையினர், நுழைவு வரி வசூல் மையம் அமைத்து, வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூல் செய்து வருகின்றனர். நாடுகாணி முதல் மாநில எல்லையான கீழ்நாடுகாணி வரை, 6 கி.மீ., சாலை பல இடங்களில் சேதமடைந்துள்ளது. இச்சாலையில், வாகனங்களை இயக்க சிரமப்பட்டு வருகின்றனர். கனரக வாகனங்கள் அடிக்கடி பழுதாகி, போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.சேதமடைந்த சாலையை நிரந்தரமாக சீரமைக்காமல், கற்கள், மண் அல்லது பாறை பொடி கலந்த ஜல்லி கற்களை கொட்டி, தற்காலிகமாக சீரமைப்பதால், சாலை அடிக்கடி சேதமடைந்து வருகிறது.மேலும், சாலையோரம் மண்சரிவு ஏற்படுவதை தடுக்க அமைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவரிலிருந்து, கற்களை எடுத்து, சாலையை தற்காலிகமாக சீரமைக்க பயன்படுத்தி வருகின்றனர். இதனால், சாலையோரம் மண்சரிவு அபாயம் உருவாகி வருகிறது. ஓட்டுனர்கள் கூறுகையில், 'சேதமடைந்த சாலையை நிரந்தரமாக சீரமைக்காமல், தற்காலிகமாக சீரமைப்புடன், சாலையோரம் தடுப்பு சுவரில் இருந்து கற்களை எடுத்து, இப்பணிக்கு பயன்படுத்தி வருகின்றனர். இதனால், சாலை அடிக்கடி சேதமடைகிறது. மண் சரிவு ஆபத்தும் உள்ளது. எனவே, அதிகாரிகள் இப்பகுதியை ஆய்வு செய்து சாலையை நிரந்தரமாக சீரமைக்க வேண்டும்,' என்றனர்.