அனுமதி இல்லாமல் பாறைகள் உடைப்பு; கண்டுகொள்ளாத அதிகாரிகளால் அதிருப்தி
கோத்தகிரி; கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதி இல்லாமல், பாறைகளை உடைத்து, பொக்லைன் உதவியுடன், நிலம் சமன் செய்யப்படுவது தொடர்கிறது.நீலகிரி மாவட்டத்தில், ஐகோர்ட் உத்தரவுபடி, நிலச்சரிவு ஏற்பட கூடிய பகுதிகளில், பொக்லைன் உள்ளிட்ட கனரக வாகனங்களை பயன்படுத்த தடை உள்ளது. பாறைகளை உடைப்பதற்கும் தடை உத்தரவு அமலில் உள்ளது.இதனை மீறி, பல இடங்களில் சமீப காலமாக, இரவு மற்றும் பகல் நேரங்களில், அத்துமீறல் நடந்து வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, கோத்தகிரி தட்டபள்ளம், பெப்பேன், கோடநாடு தெராடா மட்டம் மற்றும் கொட்டக்கம்பை பகுதிகளில், இரவு மற்றும் பகல் நேரங்களில், பொக்லைன் உதவியுடன், நிலம் சமன் செய்யப்பட்டு, பாறைகள் உடைக்கப்பட்டு வருவது தொடர்கிறது.இதனால், ஏற்படும் சப்தம் காரணமாக, வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுவதுடன், அவை குடியிருப்பு பகுதிக்கு வருவதுடன், சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்து ஏற்படுகிறது. இதுபோன்ற சம்பவங்களை கண்காணித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் மவுனம் காப்பது, மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள், ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.