கூடலுார்: கூடலுாரில் நடந்த அரசு விழாவில், 13 ஆயிரத்து 173 பயனாளிகளுக்கு, 9.85 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு திட்ட சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கூடலுாரில் நடந்தது. மகளிர் திட்ட இயக்குனர் ஜெயராமன் வரவேற்றார். மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமை வகித்து பேசுகையில்,''நீலகிரி மாவட்டத்தில் மாணவிகளை விளையாட்டில் ஊக்கப்படுத்த, 50 பள்ளிகளுக்கு கிரிக்கெட் கிட் வழங்கப்படுகிறது. பள்ளிகளுக்கு இடையே, 'நீலகிரி பிரிமியம் கிரிக்கெட்' போட்டிகள் நடத்தப்படும்,'' என்றார். நீலகிரி தொகுதி எம்.பி., ராஜா பேசுகையில்,''சிறிய மாவட்டமான நீலகிரியில், பெண்கள் உரிமை தொகையாக மொத்தம், 11.6 கோடிரூபாய் வழங்கப்படுகிறது. உங்களுடன் ஸ்டாலின், நிகழ்ச்சியில் பெறப்பட்ட மனுவின் அடிப்படையில் மேலும் பலருக்கு உரிமை தொகை வழங்கப்படும். உரிமை தொகை பெண்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. கிராமப் பொருளாதாரம் வளர்ச்சி பெறுகிறது,'' என்றார். தொடர்ந்து, பயனாளிகளுக்கு, 9.85 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முன்னாள் கூடலுார் தொகுதி எம்.எல்.ஏ., திராவிட மணி, நகராட்சி கமிஷனர் சக்திவேல், அரசு அதிகாரிகள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் பங்கேற்றனர். தொடர்ந்து, தோட்டமூலா பகுதியில், எம்.பி., தொகுதி மேம்பாட் நிதியில் கட்டப்பட்டுள்ள குழந்தைகள் வளர்ச்சி திட்ட மையம், மாக்கமூலா பகுதியில் கட்டப்பட்ட தடுப்பு சுவரை, நீலகிரி எம்.பி., ராஜா திறந்து வைத்தார்.