மேலும் செய்திகள்
விவசாயிகள் பகலில் மின் மோட்டாரை பயன்படுத்துங்கள்
22-Jun-2025
ஊட்டி; 'சோலார் மின்சாரத்தை முழுமையாக பயன்படுத்த அனைத்து விவசாயிகளும் முன் வர வேண்டும்,' என, மின்வாரியம் அறிவுறுத்தி உள்ளது.நீலகிரியில் தேயிலைக்கு அடுத்தப்படியாக மலை காய்கறி விவசாயம், 20 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்படுகிறது. 8,000 ஏக்கர் பரப்பில், தேயிலை தோட்டங்களில் நடுவே ஊடுபயிராகவும் மலை காய்கறிகள் பயிரிடப்படுகிறது. இங்கு சிறு விவசாயிகளின் மேம்பாட்டுக்காக, தோட்டக்கலை துறை சார்பில் பல்வேறு திட்டங்களை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. அதில், மானிய உதவியுடன் விவசாய தளவாடங்கள், டிராக்டர், விதை ஆகியவை வழங்கப்படுகின்றன. மின்சார பயன்பாடு அதிகம்
இங்குள்ள பெரும்பாலான தோட்டங்களில் மின்சாரத்தை பயன்படுத்தி விவசாய பணிகள் நடக்கிறது. குறிப்பாக, மலை காய்கறிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் மின்சார தேவை அதிகரித்து வருகிறது. கனமழையின் போது மரங்கள் விழும் போது, மின் கம்பம் சாய்ந்தும், மின் கம்பிகள் அறுந்து விழுவதால், விவசாய பணிகள் வெகுவாக பாதிக்கப்படுகின்றன. இதனை தவிர்க்க, மாநில அரசு சோலார் மின்திட்டத்தை, சிறு விவசாயிகள் மத்தியில் செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. சோலார் திட்ட பயன்கள்
பொதுவாக, சோலார் மின் திட்டத்தால், நீர் சூடாக்குதல், விவசாயம்,போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழல் போன்ற பல துறைகளில் பெரும் பயன் ஏற்படுகிறது. நீலகிரியில் சமீப காலமாக மின்வாரிய உதவியுடன், விவசாய பயன்பாடுக்கு பல இடங்களில் சோலார் மின்சார பயன்பாடு அதிகரித்து வருகிறது. பகலில் இலவசமாக கிடைக்கும் சூரிய ஒளி மின்சாரத்தை பயன்படுத்தி விவசாய பயன்பாடுக்கான மின் மோட்டார்களை எந்த காலகட்டத்திலும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நீலகிரியில் பசுமை ஆற்றல் திட்டங்களை ஊக்குவிக்கும் வகையில் கிராமங்கள்தோறும், மின்வாரியம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. சிறு விவசாயிகள் ஆர்வம்
மின்பகிர்மான வட்டமேற்பார்வை பொறியாளர் சேகர் கூறுகையில், ''சூரிய மின் ஆற்றலை பயன்படுத்துவதன் மூலம் எரிசக்தி துறையில் தன்னிறைவு பெற முடியும். இந்த திட்ட செயல்பாடுகளால் சுற்றுசூழல் மாசு குறைகிறது. விவசாயிகள் பகலில் அதிகளவில் சூரிய ஒளி மின்சாரத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும். பகலில் சோலார் மின் ஆற்றலை பயன்படுத்தி, மின் மோட்டார்களை அதிகம் உபயோகப்படுத்துவதால் மின்சாரத்தை சேமிக்க முடியும். சோலார் மின்சார தயாரிப்பில் உற்பத்தி செலவு குறையும். இதனால், மழை காலத்திலும் எவ்வித பிரச்னை இருக்காது,'' என்றார்.
நீலகிரியில் ஏற்கனவே, 2000 விவசாய மின் இணைப்புகள் உள்ளன. தற்போது நடந்து வரும் மின் வாரிய விழிப்புணர்வு காரணமாக, இலவச மின்சாரத்திற்கு மின் இணைப்பு கேட்டு, 500 விவசாயிகள் விண்ணப்பித்துள்ளனர். விவசாயிகள் பசுமை ஆற்றல் திட்டத்தின் கீழ், சோலார் மின்சாரத்தை முழுமையாக பயன்படுத்த முன் வந்தால் பெரும் பயன் ஏற்பட வாய்ப்புள்ளது. நடப்பாண்டில் இந்த திட்டத்தில், 5,000 விவசாயிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
22-Jun-2025