மாத்திரைகள் பாதுகாப்பு அறையில் திடீர் தீ விபத்து
பாலக்காடு, ; பாலக்காடு அரசு மருத்துவமனையின் மாத்திரைகள் பாதுகாக்கும் அறையில் தீ பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.கேரள மாநிலம், பாலக்காடு அரசு மருத்துவமனையின் மாத்திரைகள் பாதுகாக்கும் அறையில் நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு திடீரென தீ பற்றி எரியத் துவங்கியது.இதை கண்ட மருத்துவமனை ஊழியர்களும், அப்பகுதி மக்களும், அருகில் உள்ள மகளிர் பிரிவு மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளை அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு மாற்றினர். சம்பவத்தில் யாருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை.தகவல் அறிந்து, பாலக்காடு தீயணைப்பு நிலைய அதிகாரி அனில்குமார் தலைமையிலான தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். மின்சார ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகவும், இதில், ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் சேதமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.