கொப்புள நோய் அபாயம்: தேயிலை விவசாயிகள் கவலை
கோத்தகிரி: தேயிலை தோட்டங்களில் கொப்புள நோய் அபாயத்தாலும், பசுந்தேயிலைக்கு கட்டுபடியான விலை கிடைக்காததால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக, இரவு நேரங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், தேயிலை மற்றும் மலைக்காய்கறி தோட்டங்களில் ஈரப்பதம் அதிகரித்து உள்ளது. கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில், வானம் மேக மூட்டமாக காணப்படுவதால், தேயிலை தோட்டங்களில் கொப்புள நோய் தாக்கும் அபாயம் அதிகரித்துள்ளது. மழையின் போது, தேயிலை தோட்டங்களில், உரமிட்டு பராமரித்த நிலையில், மகசூல் கணிசமாக உயர்ந்து வருகிறது. தற்போது, ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு, 18 ரூபாய் வரை விலை கிடைத்து வருகிறது. இடுபொருள் விலையேற்றம், தொழிலாளர்களின் கூலி உயர்வு மற்றும் தோட்ட பராமரிப்பு செலவு, உள்ளிட்ட செலவினங்கள் அதிகமாக உள்ளதால், விவசாயிகளுக்கு தற்போது கிடைத்து வரும் விலை போதுமானதாக இல்லை . வரும் நாட்களில், இதே காலநிலை நிலவும் பட்சத்தில், விவசாயிகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்பதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்,