தொழிலாளர் குடியிருப்பில் பதுங்கிய உடும்பு மீட்டு வனத்தில் விடுவிப்பு
பந்தலூர் : பந்தலுார் அருகே தொண்டியாளம் என்ற இடத்தில் வீட்டிற்குள், பதுங்கிய உடும்பை வனத்துறையினர் மீட்டு வனப்பகுதியில் விடுவித்தனர்.பந்தலுார் அருகே தொண்டியாளம் பகுதியில் தனியார் எஸ்டேட் தொழிலாளர்கள் குடியிருப்பு அமைந்து உள்ளது. வடமாநில தொழிலாளர்கள் குடியிருக்கும் இங்கு நேற்று மாலை வீட்டின் பின்பகுதியில் உள்ள கழிவறைக்குள் உடும்பு ஒன்று இருந்ததை சிலர் பார்த்துள்ளனர். இதுகுறித்து அருகில் உள்ளவர்களிடம் கூறிய நிலையில், தேவாலா வனச்சரகர் சஞ்சீவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனச்சரகர் தலைமையிலான வனக்குழுவினர், சம்பவ இடத்திற்கு வந்து கழிவறைக்குள் புகுந்த உடம்பை மீட்டு, சாக்கு பையில் கட்டி எடுத்து சென்று வனப்பகுதியில் விடுவித்தனர்.இந்த பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில், உடும்புகள் நடமாடி வரும் நிலையில், கடந்த காலங்களில் பலரும் உடும்பை வேட்டையாடி வந்தனர். இந்நிலையில், குடியிருப்பு பகுதியில், புகுந்த உடும்பை உடனடியாக பிடித்து செல்ல வனத்துறைக்கு, தொழிலாளர்கள் தகவல் தெரிவித்த நிலையில், தொழிலாளர்களை வனக்குழுவினர் பாராட்டினர்.வனத்துறையினர் கூறுகையில்,'அழிவின் பட்டியலில் உள்ள உடும்பை இப்பகுதியில் கண்டால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தரவேண்டும். அதனை வேட்டையாட யாராவது வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.