சாரைப்பாம்பை விழுங்கிய ராஜநாகம்
பந்தலுார்: கேரளா மாநிலம் வயநாடு பகுதியில், சாரை பாம்பை ராஜநாகம் விழுங்கிய நிலையில், அதனிடமிருந்து தப்பிய பாம்பை கண்டு மக்கள் வியப்படைந்தனர். கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் சுகந்திரி பகுதியை சேர்ந்தவர் ஜான்சன். ஏலக்காய் தோட்டங்களுக்கு மத்தியில் இவரது வீடு அமைந்துள்ளது. அவரின் வீட்டு வாசலுக்கு சாரைப்பாம்பு ஒன்று வந்துள்ளது. அதனை துரத்தி வந்த ராஜநாகம் ஒன்று, சாரைப்பாம்பை விழுங்கி பின்னர் வெளியே துப்பி உள்ளது. இதுகுறித்து வனத்துறையினர் மற்றும் பாம்பு பிடி வீரர் ஷபீக்கிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து பாம்பு பிடி வீரர் சம்பவ இடத்திற்கு வந்து, ராஜநாகத்தை லாவகமாக பிடித்து வனப்பகுதியில் கொண்டு போய் விடுவித்தார். சாரைப்பாம்பு ராஜ நாகத்திடம் இருந்து உயிர் தப்பி அருகில் உள்ள தோட்டத்திற்குள் சென்று மறைந்தது.