| ADDED : ஜன 27, 2024 03:20 AM
பந்தலுார்: பந்தலுார் அருகே குந்தலாடி அரசு பள்ளி வளாகத்தில், நெலக்கோட்டை ஊராட்சி சார்பில், கிராம சபை கூட்டம் தலைவர் டெர்மிளா தலைமையில் நடந்தது.அதில், 'கிராம பகுதி குடியிருப்புகள் பாதிக்காமல் தடுக்கும் வகையில் தடுப்பு சுவர்கள் அமைக்க வேண்டும்,' என, பலர் பேசினர்.அப்போது, 'நெலக்கோட்டை அருகே அவுண்டேல், கிராமத்திற்கு செல் லும் சாலை, 50 ஆண்டுகளாக போராடியும், சீர மைக்கப்படவில்லை.இந்த சாலையை சீரமைக்க வேண்டும்,' என, தெரிவித்த மக்கள், திடீரென கிராம சபையில் பிச்சை எடுக்கும் நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, 'சம்பந்தப்பட்ட பகுதி தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்டது. ஊராட்சி ஒன்றிய பதிவேடுகளில் அவுண்டேல் சாலை குறித்த விபரங்கள் இல்லை,' என, தெரிவிக்கப்பட்டது. 'அப்பகுதியை நிலாகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி,' என, வருவாய் துறையினர் விளக்கம் அளித்தனர்.தொடர்ந்து, தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 'ஆர்.டி.ஓ., தலைமையில் நேரடி ஆய்வு மேற்கொண்டு தீர்வு காணப்படும்,' என, உறுதி அளித்தார். அதனை ஏற்று கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டதை தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு கிராம சபை நிறைவு பெற்றது.