ஊட்டி மரவியல் பூங்கா அருகே அமைந்துள்ள சதுப்பு நிலம் துவம்சம்! ஏரியில் துார்வாரிய கழிவை கொட்டியதால் பாதிப்பு
ஊட்டி; ஊட்டி நகரில் மரவியல் பூங்கா அருகே, பறவைகள் வாழ்விடமாக இருந்த, சதுப்பு நிலத்தில், ஏரியில் துார் வாரிய கழிவுகளை கொட்டியதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது; இதேபோல, மாவட்டத்தில் பலசதுப்பு நிலங்கள் அழிக்கப்பட்டுள்ளன. ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, குந்தா உள்ளிட்ட தாலுகா பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கரில் சதுப்பு நிலங்கள் உள்ளன. இந்த சதுப்பு நிலங்களால் நிலத்தடி நீர்மட்டம் பாதுகாக்கப்படுகிறது. இந்நிலையில், நீலகிரியில் பல இடங்களில் அரசின் புறம்போக்கு நிலம்; சதுப்பு நில பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு, கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. குறிப்பாக, கோத்தகிரியில் 'ரைபிள் ரேஞ்ச்' பகுதியில், பல ஏக்கர் தற்போது ஆக்கிரமிக்கப்பட்டு கட்டடங்களாகவும், 'பார்க்கிங்' பகுதியாகவும் மாற்றப்பட்டுள்ளது. குந்தா பகுதியில் மின்வாரிய குடியிருப்பை ஒட்டி உள்ள சதுப்பு நிலத்தில் அணையின் சகதிகளை கொட்ட மின்வாரியம் திட்டமிட்டு இருப்பதை அறிந்த சுற்றுச்சூழல் அமைப்பினர் தடுத்து நிறுத்தினர். ஊட்டியில் சதுப்பு நிலம் துவம்சம் இந்நிலையில், ஊட்டி படகு இல்ல ஏரியை ஒட்டியுள்ள பகுதியில், 3 ஏக்கரில் சதுப்பு நிலம் உள்ளது. மரவியல் பூங்கா அருகே அமைந்துள்ள இந்த பகுதியில் நுாற்றாண்டுகளாக பறவைகளின் வாழ்விடமாக உள்ளது. இங்கு உள்ளூர் பறவைகளான, மூன்று வகை வாத்து, நீர் காகம் உட்பட பல பறவைகள் உள்ளன. மேலும், அக்., முதல், மார்ச் வரை, 30 வகை வெளி மாநில பறவைகள் இன பெருக்க காலத்தில் வருகை தருகின்றன என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நில பகுதியில், ஏரியில் துார்வாரப்பட்டமண், கழிவுகள் முழுவதையும் சதுப்பு நிலத்தில் கொட்டியதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. குந்தா சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த பெள்ளியப்பன் கூறுகையில், ''சதுப்பு நிலங்களை ஆக்கிரமித்து விவசாயம் செய்வதாக கூறி, சமீபத்தில் சில கிராமங்களில் விவசாயிகளுக்கு அதிகாரிகள் 'நோட்டீஸ்' வழங்கினர். ஆனால், மாவட்ட தலைநகரான ஊட்டிநகரில் பல ஏக்கரில் சதுப்பு நிலம் அரசு துறையால் அழிக்கப்பட்டு வருவது குறித்து இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வருத்தம் அளிப்பதாக உள்ளது,''என்றார்
நடவடிக்கை நிச்சயம்
ஊட்டி ஆர்.டி.ஓ., சதீஷ் கூறுகையில், ''சதுப்பு நிலம் ஆக்கிரமிப்பு குறித்து வரும் புகாரை வருவாய் துறையினர் உடனடி ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஊட்டி, குந்தாவில் சதுப்பு நிலத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து வருவாய் துறையினருக்கு, உரிய ஆதாரங்களுடன் மனு அளித்தால், உடனடியாக ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.