உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கூடலுார் அரசு தலைமை மருத்துவமனையில் டாக்டர் பற்றாக்குறை! சிகிச்சைக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் நோயாளிகள்

கூடலுார் அரசு தலைமை மருத்துவமனையில் டாக்டர் பற்றாக்குறை! சிகிச்சைக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் நோயாளிகள்

கூடலுார் ; கூடலுாரில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், டாக்டர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் நோயாளிகள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.ஊட்டியில், அரசு மருத்துவக்கல்லுாரி துவங்கப்பட்டதால், கூடலுார் தாலுகா அரசு மருத்துவமனை, மாவட்ட மருத்துவமனையாக மாற்றப்பட்டது. தொடர்ந்து, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், 31 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டு, புதிய கட்டடங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது.

தொடரும் டாக்டர் பற்றாக்குறை

இந்த மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனையாக மாற்றப்பட்டாலும், 14 டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இங்கு தலைமை டாக்டர் உள்ளிட்ட சில டாக்டர்களை தவிர, பெரும்பாலான டாக்டர்கள் இரண்டு ஆண்டுகள் ஒப்பந்த முறையில் பணியாற்றி வந்தனர். இந்நிலையில், கடந்த ஆண்டு ஒப்பந்த காலத்தை அரசு ஓராண்டாக மாற்றியது. இந்த உத்தரவை தொடர்ந்து, ஒப்பந்த முறையில் பணியாற்றி வந்த முதுநிலை டாக்டர்கள் கடந்த ஆண்டு தங்களை விடுவித்து சென்றனர்.

ஒப்பந்த காலம் முடிந்தால் சிக்கல்

தொடர்ந்து, தலைமை டாக்டர் உள்ளிட்ட, 7 டாக்டர்கள் பணியாற்றி வந்தனர். அதில், ஒப்பந்த முறையில் பணியாற்றி வந்த, 3 டாக்டர்கள், ஓராண்டு ஒப்பந்த காலம் முடிந்ததை தொடர்ந்து கடந்த மாதம் பணியில் இருந்து விடுபட்டு சென்றனர். தற்போது, தலைமை டாக்டர் உட்பட, 4 டாக்டர்கள் பணியாற்றி வருகின்றனர். மருத்துவமனையில் ஏற்பட்ட டாக்டர்கள் பற்றாக்குறையால், நாள்தோறும் சிகிச்சைக்கு வரும் நுாற்றுக்கணக்கான நோயாளிகள், நீண்ட நேரம் காத்திருந்து சிகிச்சை பெற்று செல்ல வேண்டிய நிலை உள்ளது. சிறப்பு டாக்டர்கள் இல்லாததால், நோயாளிகள் ஊட்டி அல்லது கேரளா தனியார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், உள்ளூர் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.

நடவடிக்கை எடுக்குமா அரசு?

நோயாளிகள் கூறுகையில், 'அரசு மருத்துவமனையில் ஏற்கனவே டாக்டர் பற்றாக்குறை இருந்த நிலையில், ஓராண்டு ஒப்பந்த முறையில் பணியாற்றி வந்த பல டாக்டர்கள், பணியில் இருந்து சென்றதால், டாக்டர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், சிகிச்சைக்கு வரும் மக்கள் நீண்ட நேரம் காத்திருந்து சிகிச்சை பெற வேண்டி உள்ளது. அவசர சிகிச்சை தேவை உள்ளவர்கள், வெளியூருக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையை நம்பி உள்ள இப்பகுதி மக்களின் பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு, காலியாக உள்ள அனைத்து சிறப்பு டாக்டர் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை