மேலும் செய்திகள்
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
உடுமலை : கிராமங்களில் வார்டு வளர்ச்சி பணிக்காக அரசு ஒதுக்கிய நிதியை தங்களின் வளர்ச்சிக்காக பயன்படுத்திய தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. நகரம் வளர்ச்சி பெறுவது போல், கிராமங்களில் அரசின் திட்டப்பணிகள் நிறைவடையவேண்டும் என அரசு சார்பில் ஒன்றிய பொது நிதியில் நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், இந்த நிதியை முறையாக பயன்படுத்தாமல் தங்களின் வளர்ச்சிக்காக தி.மு.க., கவுன்சிலர்கள் சுருட்டி கொண்டனர் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.
உடுமலை அருகே உள்ள குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 13 வார்டுகள் உள்ளது. ஒன்றிய குழுவில் உள்ள தி.மு.க., கவுன்சிலர்கள் சிலர் தங்களது சொந்த வார்டில் பணிகளை தேர்ந்தெடுக்காமல் பிற பகுதிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கவுன்சிலர்களை 'கவனித்து' வளர்ச்சி பெற்ற ஊராட்சி நிர்வாகத்தினர் மற்றும் தனியார் மட்டும் ஒன்றிய பொது நிதியில் அதிகளவு ஒதுக்கீடு பெற்றுள்ளனர். ஒன்றிய பொது நிதியில் தற்போது இருப்பிலுள்ள நிதியை ஒதுக்கீடு செய்ய பரிந்துரைகளை கடந்த சில நாட்களுக்கு முன் ஒன்றிய கவுன்சிலர்களிடமிருந்து ஒன்றிய அதிகாரிகள் பெற்றனர். இதில், பல கவுன்சிலர்கள் தங்கள் வார்டுக்கு பணிகளை ஒதுக்காமல் சம்மந்தம் இல்லாத வார்டுகளுக்கு பணிகளை பரிந்துரைத்துள்ளனர். இதற்கு பல ஊராட்சிகளில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கொங்கல்நகரம் ஊராட்சியில், தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் தனது வார்டுக்குட்பட்ட கொங்கல்நகரம், லிங்காமாவூர் உட்பட கிராமங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை. குடிநீர் மற்றும் கான்கிரீட் ரோடு பணிகளுக்கு நிதி ஒதுக்காமல் வேறு பகுதிக்கு நிதி ஒதுக்க பரிந்துரை வழங்கியுள்ளார். சொந்த வார்டை புறக்கணிக்கும் ஒன்றிய கவுன்சிலரை கண்டிக்கிறோம்', என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒன்றிய பொது நிதியில் வேறு வார்டுகளுக்கு ஒன்றிய கவுன்சிலர்கள் நிதி ஒதுக்குவதை தடை செய்ய வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
சோமவாரப்பட்டி ஊராட்சியில் தனியார் லே-அவுட்டிற்கு பயன்படும் வகையில் ஒன்றிய பொது நிதியில் பாலம் கட்டப்பட்டது; தற்போது ஓடையில் ரோடு போட பரிந்துரை வழங்கியிருக்கும் தி.மு.க.,ஒன்றிய கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது. மனுவில், தனியார் லே-அவுட் அமைப்பவர்கள் சிறிய பாலம் மற்றும் மெயின் ரோட்டிலிருந்து இணைப்பு ரோடு அமைக்க அதிக செலவாகிறது. இதனால், ஒன்றிய கவுன்சிலருக்கு குறிப்பிட்ட அளவு பணம் அளித்து ஒன்றிய பொது நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு பெற்று பாலம் மற்றும் ரோடு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மக்கள் நலப்பணிகளுக்காக ஒதுக்கப்படும் நிதி முறைகேடாக அதிகளவு பயன்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்', என குறிப்பிடப்பட்டுள்ளது.
குப்பம்பாளையம் மற்றும் மண்ணாம்பாளையம் கிராம குடிநீர் பிரச்னைக்கு உரிய நிதி ஒதுக்காமல் ஒன்றிய கவுன்சிலர்கள் புறக்கணித்துள்ளதற்கும் கிராம மக்களிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திரும்ப கிடைக்குமா முன்பணம்: ஒன்றிய பொது நிதியில் நிதி ஒதுக்கீடு பெற மொத்த நிதியில், 15 சதவீதம் முன்பணமாக ஒன்றிய கவுன்சிலர்களுக்கு வழங்க வேண்டும். குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள பல ஊராட்சி நிர்வாகத்தினரும், தனியாரும் பல ஒன்றிய கவுன்சிலர்களுக்கு முன்பணம் அளித்துள்ளனர். விரைவில், உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட உள்ளதால் ஒன்றிய பொது நிதியில் ஒதுக்கீடு கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது. இதனால், முன்பணம் அளித்தவர்கள் ஒன்றிய கவுன்சிலர்களிடம் தொகையை திரும்ப கேட்டு நடையாய் நடந்து கொண்டுள்ளனர்.
03-Oct-2025