மண்ணரிப்பை தடுக்க...! மலைப்பாதைகளில் மண் ஆணி பொருத்தும் பணி
ஊட்டி: நீலகிரி மலைப்பாதையில் மண்ணரிப்பை தடுக்கும் 'ைஹட்ரோ சீடிங்' முறையில் மண் ஆணி பொருத்தும் பணி தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.நீலகிரி மாவட்டத்தில் அடிக்கடி நிலவும் காலநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்படும் வெள்ள பாதிப்பு, பொருளாதார இழப்புகளை கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக, மலைப்பாதைகளில் மண்ணரிப்பை தடுக்கவும், சுற்றுச்சூழலுக்கு இணக்கமான செலவு குறைந்த பாதுகாப்பான புதிய வழிமுறைகள் கண்டறிந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.'சாயில் நெயிலிங்' தொழில் நுட்பம் வாயிலாக மண்சரிவை தடுக்கும் வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் மட்டும், 284 இடங்கள் பேரிடர் பகுதிகளாக உள்ளன. பசுமையை பாதுகாக்கும் தொழில் நுட்பம் இதில், 20 இடங்கள் அதிக பேரிடர் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, தேசிய நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பர்லியாரிலிருந்து ஊட்டி வரை நிலச்சரிவு அபாயம் உள்ள இடங்களில் 'சாயில் நெய்லிங்' அதாவது மண் ஆணி பொருத்தி 'ைஹட்ரோ சீடிங்' முறையில் சரிவுகளில் பசுமையை பேணி பாதுகாக்கும் தொழில் நுட்பம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், தாவரங்கள் வளர்ப்பதன் வாயிலாக மண்ணரிப்பு தடுக்கப்பட்டு, பருவமழையின் போது ஏற்படும் பாதிப்பு குறைக்கப்படுகிறது. பர்லியார் முதல் ஊட்டி வரை மலை சரிவுகளில் மூன்று இடங்களில் இப்பணிகள் துரித கதியில் நடந்து வருகிறது. ஏற்கனவே, மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஊட்டியில் கோடப்பமந்து, கோத்தகிரி , இத்தலார் உள்ளிட்ட பகுதிகளில் 'சாயில் நெய்லிங்' அதாவது மண் ஆணி பொருத்தி 'ைஹட்ரோ சீடிங்' முறை வெற்றிகரமாக நடந்துள்ளது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ''நீலகிரி மலையில் செங்குத்தான சரிவில் மண் அரிப்பை தடுக்க, புதிய தொழில் நுட்பத்தில், 3 மீட்டர் துளையிட்டு, சிமென்ட் கூழ் ஏற்றப்பட்டு, 'பயோமெட்ரிக்' முறையில் விதைகள் தெளிக்கப்படும். மேலும், 'சாயில் நெயிலிங்' அமைத்து 'ஜியோகிரிட்' வாயிலாக மண்ணின் உறுதி தன்மையை அதிகரித்து, 'ஹைட்ரோசீடிங்' முறையில் புற்கள் வளர்க்கப்படும். மழை காலங்களில் மண்சரிவு அபாயத்தை தடுக்க, இத்திட்டம் பயனுள்ளதாக அமையும்,'' என்றார்.