ஒரு அரசு பள்ளியில் இரண்டு வகுப்பறைகள் 40 மாணவர்களின் கல்வி பாதிப்பு: கண்டுகொள்ள யாருமில்லை
கூடலுார், ;கூடலுார் கீழ்நாடுகாணி, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இடப்பற்றாக் குறையால், அங்குள்ள இரண்டு அறைகளில், ஒன்று வகுப்பறையாவும் மற்றொன்று அலுவலகத்துடன் கூடிய வகுப்பறையாகவும் பயன்பட்டு வருகிறது.கூடலுார், கீழ்நாடுகாணி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, 7 சென்ட் இடத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு இருந்த இரண்டு கட்டடங்களில் நான்கு அறைகள் இருந்தன. அதில் ஒன்று அலுவலகமாகவும் மற்றவை வகுப் பறைகளாக பயன்படுத்தி வந்தனர்.இந்நிலையில், பள்ளியில் சேதமடைந்த கட்டடத்தை இடித்து விட்டு புதிய கட்டடத்தை கட்ட முடிவு செய்தனர். இரண்டு அறைகள் கொண்ட, அந்த கட்டடம், 2021ல் இடிக்கப்பட்டது. மற்றொரு கட்டடத்தில் உள்ள இரண்டு அறைகளில் ஒன்றை வகுப்பறையாகவும், மற்றொரு அறைஅலுவலகம் மற்றும் வகுப்பறையாகவும் பயன்படுத்தி வருகின்றனர். இங்கு ஸ்மார்ட் கிளாஸ் வசதி உள்ளது. 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் இரு அறைகளில் அமர்ந்து பாடம் பயின்று வருகின்றனர். தலைமை ஆசிரியர் உட்பட இருவர் பணியில் உள்ளனர். வகுப்பறை பற்றாக்குறை காரணமாக மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது. பெற்றோர் கூறுகையில், 'இப்பள்ளியில் வகுப்பறை பற்றாக்குறை காரணமாக, ஒன்று முதல் 5ம் வகுப்பு மாணவர்கள், ஒன்றாக அமர்ந்து கல்வி பயில வேண்டிய சூழல் உள்ளது. மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், புதிய வகுப்பறைகளை விரைவில் கட்டித்தர மாவட்ட நிர்வாகம், கல்வித்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.