உல்லத்தி ஊராட்சியை மூன்றாக பிரிக்க கிராம மக்கள் மனு
ஊட்டி: உல்லத்தி ஊராட்சியை மூன்றாக பிரிக்க வலியுறுத்தி, கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். உல்லத்தி சுற்றுவட்டார பகுதி மக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனு: ஊராட்சிகள் பிரிப்பது சம்பந்தமாக உல்லத்தியில் கடந்த, 14ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், ஊராட்சியை உல்லத்தி மற்றும் தலைக்குந்தா என இரண்டு ஊராட்சிகளாக பிரிக்க முன்மொழிவு உள்ளதாக கூறப்பட்டது. உல்லத்தி ஊராட்சி பரப்பளவில் பெரியதாகவும் மக்கள் தொகை, 10,000க்கும் மேற்பட்டும் உள்ளது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்கள் ஒவ்வொன்றும் மிக தொலைவில் இருப்பதால் தற்போது ஊராட்சி அலுவலகம் அமைந்துள்ள கல்லட்டி ஊருக்கு செல்வதற்கு சிரமமாக உள்ளது. சரியாக பஸ் வசதி கிடையாது. எனவே , உல்லத்தி ஊராட்சியை 'தலைகுந்தா, கல்லட்டி மற்றும் உல்லத்தி' என, மூன்றாக பிரிக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.