எச்சரிக்கை! பத்திரிகையாளர் பெயரில் மிரட்டினால் புகார் தரலாம்; சட்ட ரீதியான நடவடிக்கைக்கு கலெக்டர் அதிரடி உத்தரவு
ஊட்டி : 'பத்திரிகையாளர்கள் என்ற பெயரை பயன்படுத்தி பொதுமக்களை மிரட்டினால், போலீசார் வாயிலாக வழக்குப்பதிவு செய்து, சட்ட ரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என, கலெக்டர் எச்சரித்துள்ளார்.கலெக்டர் லட்சுமி பவ்யா அறிக்கை: நீலகிரியில் பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் ஒரு சில நபர்கள், அரசு அலுவலர்கள், விவசாயிகள், தொழில் முனைவோர், வீடு கட்டுபவர்கள் மற்றும் பொதுமக்களை மிரட்டுவதும், அவர்களை பற்றி அவதுாறு செய்திகளை வெளியிட்டு கலக்கம் ஏற்படுத்துகின்றனர்.மேலும், 'தங்களுக்கு உயர் அலுவலர்களை நன்கு தெரியும்; அவர்களிடம் சொல்லி உங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுக்கிறேன்,' என்று ஏமாற்று வார்த்தைகளை பயன்படுத்தி பணத்தையும் பறித்து கொள்வதாக ஏராளமான புகார்கள் தொடர்ந்து வருகின்றன. போலி அடையாள அட்டை
ஒரு சில நபர்கள், போலியான அடையாள அட்டைகளை பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றும் மோசடி செயல்களில் ஈடுபட்டு வருவது தெரியவருகிறது. அந்த நபர்களை போலீசார் மூலம் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு கண்டறியும் போது அவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.தவிர, பத்திரிகையாளர்கள் என்ற பெயரை பயன்படுத்தி, அரசு அலுவலர்கள், விவசாயிகள், தொழில் முனைவோர், வீடு கட்டுவோர் மற்றும் பொதுமக்களை மிரட்டினால் சம்மந்தப்பட்ட நபர்கள் உடனடியாக புகார் அளிக்க வேண்டும். இது போன்ற செயலில் ஈடுபடும் நபர்கள் மீது போலீசார் வாயிலாக வழக்கு பதிவு செய்யப்பட்டு கோர்ட் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக, 9498042445 என்ற 'வாட்ஸ்ஆப்' எண்ணிற்கு தகுந்த ஆதாரத்துடன் தகவல்களை அனுப்பினால், அந்த நபர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சொந்த வாகனங்களில், பத்திரிகை சாராத நபர்கள், அரசு முத்திரை இல்லாமல், போலியாக 'பிரஸ்' என்ற ஒட்டுவில்லைகளை (ஸ்டிக்கர்) ஒட்டியிருந்தால், அவர்கள் மீது வட்டார போக்குவரத்து அலுவலர் மூலமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.