உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பழங்குடியினருக்கான தேயிலை தொழிற்சாலை எப்போது? ஆதங்கத்தில் 18 ஊர் மக்கள்

பழங்குடியினருக்கான தேயிலை தொழிற்சாலை எப்போது? ஆதங்கத்தில் 18 ஊர் மக்கள்

கோத்தகிரி; கோத்தகிரி பகுதி பழங்குடியின மக்களின் வாழ்வு மேம்பட ஏதுவாக, கோழித்தொறை பகுதியில், தேயிலை தொழிற்சாலை நிறுவ, 8 ஆண்டுகளுக்கு முன்பு, எஸ்.ஏ.டி.பி., திட்டத்தில், 80 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. ஊட்டி பழங்குடியினர் ஆய்வு மைய இயக்குனர் மூலம் இந்த நிதியில் நிலப்பதிவுடன், நிலம் சமன் செய்வது, விவசாயிகளுக்கு பயிற்சி, கட்டட அனுமதி, தடையில்லா சான்று பெறுவது, பசுந்தேயிலை சேகரிப்பு கட்டடம், சாலை வசதி, மின் இணைப்பு மற்றும் தேயிலைத் தோட்டம் நில அளவை உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த செலவினங்கள் போக, 62.55 லட்சம் ரூபாய் இருப்பு உள்ள நிலையில், தொழிற்சாலை நிறுவுவதற்கான எந்த பணியும் நடைபெறவில்லை. இதனால், 'செம்மனாறை, தாளமுக்கை, மேல் கூப்பு, கீழ் கூப்பு, கோழித்தொறை, அட்டடி, புதூர், குஞ்சப்பனை, கோழிக்கறை, சுண்டப்பட்டி, பனகுடி, அரையூர், மெட்டுகல்,' உட்பட, 18 பழங்குடியின கிராம மக்களுக்கு பயன் இல்லாமல் உள்ளது.தற்போது, தனியார் ஏஜென்ட்கள் மூலம் மாலை, 4:00 மணிக்குள் அறுவடை செய்யப்படும் பசுந்தேயிலை, 15 கி.மீ., தூரம் சென்று குறைந்த விலைக்கு, வினியோகிக்க வேண்டிய நிலை உள்ளது. இப்பகுதியில் தொழிற்சாலை நிறுவப்படும் பட்சத்தில், மாலை, 6:00 மணி வரை பசுந்தேயிலை பறிக்கலாம். தேயிலை ஏல மையத்தில் நேரடியாக அதிக விலைக்கு விற்கலாம்.கிடைக்கும் லாபத்தை, குழந்தைகளுக்கு கல்வி, மருத்துவம், பண்டிகை முன்பணம், இயற்கை உரம் வழங்கலாம்.மேலும், 800 ஏக்கர் பரப்பளவில், தேயிலை விவசாயம் மேற்கொள்ளும் பழங்குடியின மக்கள் தொழிற்சாலையை நிர்வகித்து, மக்கள் பயனடைய வாய்ப்புள்ளது. பல முறை துறை உயர் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை நீலகிரி பழங்குடியினர் தேயிலை உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் சண்முகம் கூறுகையில், ''தொழிற்சாலை அமைய செலவிடப்பட்ட நிதி போக, மீதமுள்ள, 62.55 லட்சம் ரூபாயை, பழங்குடியினர் ஆய்வு மையத்தில் இருந்து, பொதுப்பணித்துறைக்கு ஒப்படைக்க வேண்டும்.அவர்கள் மூலம் தொழிற்சாலை நிறுவதுடன், தேவையான கூடுதல் நிதி ஒதுக்க மாநில முதல்வர் உத்தரவிட்டு, பழங்குடியின மக்களை பாதுகாக்க வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ