வயநாடு வனப்பகுதியில் துள்ளி திரியும் வெள்ளை மான்
பந்தலுார்; பந்தலுார் எல்லையில் உள்ள, கேரளா மாநிலம் வயநாடு சுல்தான் பத்தேரியில் இருந்து வடக்கநாடு செல்லும் சாலையில், முத்தங்கா வனவிலங்கு சரணாலயம் அமைந்து உள்ளது. இந்த பகுதியில் தேசிய நெடுஞ்சாலையும் அமைந்துள்ளது. வனப்பகுதிகளில் உலா வரும் யானைகள், மான்கள், காட்டெருமைகளை இந்த வழியாக வந்து செல்லும் பயணிகள் ரசித்து செல்கின்றனர்.இந்நிலையில், நேற்று வடக்கநாடு, பஜேரி பகுதியை சேர்ந்த இளைஞர் தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது, சாலையோர வனப்பகுதியில் வெள்ளை நிறத்தில் ஒரு மான் துள்ளி குதித்து ஓடியதை பார்த்துள்ளார். அதனை 'வீடியோ' எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். முத்தங்கா வனப் பகுதியை ஒட்டிய பந்திப்பூர் வனப்பகுதியில் இது போன்ற மான்கள் அதிக அளவில் உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.கால்நடை டாக்டர் பாலாஜி கூறுகையில், ''அல்பினிசம் எனப்படும் வெண்மை தோல் நோய் குறைபாடு உடைய நிறமிகள் விலங்கின் தோலில் தோன்றுவதால் இது போன்று நிறம் மாறும். இது ஒரு மரபணு குறைபாடு உள்ள நோய் என்பதுடன், இதுபோன்ற வன விலங்குகளுக்கு பார்வை குறைபாடு, அதிக வெளிச்சத்தை பார்க்க முடியாத நிலை உருவாகும். மேலும், இதுபோன்ற வெண்மை நிறம் உள்ள சிறிய விலங்குகளை, எளிதில் அடையாளம் கண்டு பிற விலங்குகள் வேட்டையாடுவதால் இவை விரைவில் இறந்து விடும்.இதனை வனத்துறையின் கண்காணித்து பாதுகாக்க வேண்டும்,'' என்றார்.