காலையில் உலா வந்த காட்டு யானை; ஓட்டம் பிடித்த மக்கள்
பந்தலுார்; பந்தலுார் அருகே நெலாக்கோட்டை பஜார் பகுதியில் நேற்று காலை உலா வந்த காட்டு யானையை பார்த்த பொதுமக்கள் ஓட்டம் பிடித்து உயிர் தப்பினர்.நெலக்கோட்டை பஜார் பகுதி கடைகள் மற்றும் குடியிருப்புகளை ஒட்டிய புதர் பகுதியில் ஒரு கொம்பன் யானை முகாமிட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அதே பகுதியில் முகாமிட்டுள்ள யானை, காலை மற்றும் பகல் நேரங்களில் சாலையில் உலா வருவதை வழக்கமாக கொண்டுள்ளது.யானை சாலையில் வரும்போது எதிரே ஏதேனும் வாகனங்கள் வந்தால், அதனை தாக்கம் குணமும் கொண்டதால், இந்த வழியாக வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாகன ஓட்டுனர்கள் அச்சத்துடன் வாகனங்களை இயக்க வேண்டிய நிலை தொடர்கிறது. யானையை அடர்த்தியான வனப்பகுதியில் விரட்ட வேண்டும் என வலியுறுத்தி, பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தபோதும், வனத்துறை உயர் அதிகாரிகள் அது குறித்து கண்டு கொள்வதில்லை.இந்நிலையில், நேற்று காலை, 7:00 மணிக்கு நெலாக்கோட்டை பஜார் பகுதியில் யானை திடீரென உலா வந்ததால், வாக்கிங் சென்ற மக்கள் மற்றும் தோட்டங்களுக்கு வேலைக்கு சென்று தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள், அச்சமடைந்து ஓட்டம் பிடித்தனர். அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த, வனக்காவலர்கள் யானையால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், விரட்டி சென்று அருகில் உள்ள புதர் பகுதிக்குள் விரட்டினர்.மக்கள் கூறுகையில், 'இந்த யானை தொடர்ச்சியாக குடியிருப்புகள் மற்றும் பஜார் பகுதியில் உலா வருவதால், இதனை கும்கி யானைகள் உதவியுடன் அடர் வனத்திற்குள் விரட்ட வேண்டும். இந்த யானையால் டிரைவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் அதற்கு வனத்துறையை பொறுப்பேற்க வேண்டும்,' என்றனர்.