காட்டு பன்றிகளை கொல்வதற்கு வனவிலங்கு ஆர்வலர்கள் எதிர்ப்பு
பந்தலுார் : 'நீலகிரி மாவட்டத்தில் காட்டு பன்றிகளை கொல்வதற்கு அனுமதிக்க கூடாது,' என, வனவிலங்கு ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொது செயலாளர் சிவசுப்ரமணியம் மற்றும் பலர் கூறியதாவது: கூடலுார் மற்றும் பந்தலுார் பகுதிகளில் கடந்த காலங்களில், காட்டு பன்றிகளை பலரும் வேட்டையாடி அழித்து வந்தனர். சமீப காலமாக வனத்துறை மூலம் வேட்டை கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், விவசாய நிலங்களில் புகுந்து காட்டுப்பன்றிகள் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. இதனால், விவசாயிகள் பாதிக்கப்படுவது உண்மைதான். ஆனால், காட்டுப்பன்றிகள் விவசாய விளை நிலங்களுக்குள் வராமல் தடுக்க வேறு முயற்சிகளை கையாள அரசு ஆலோசிக்க வேண்டும். விவசாய நிலங்களுக்குள் வரும் காட்டு பன்றிகளை சுட்டு கொல்வதற்கு அனுமதி அளித்தால், நீலகிரியில் வேட்டை சம்பவங்கள் அதிகரிக்கும். அதன் மூலம் பிற வன விலங்களும் கொல்லப்படும் அபாயம் ஏற்படும். எனவே, நீலகிரியின் தனித்துவத்தை கருதி இந்த உத்தரவை தடை செய்ய முதல்வர் உத்தரவிட வேண்டும். இது தொடர்பாக மனு முதல்வருக்கு அனுப்பப் பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.