மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையத்தில் நடந்த மக்களுடன் முதல்வர் முகாமில் பெறப்பட்ட, 2,000க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது, மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுத்து, தீர்வு காண்பாரா என, மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். மேட்டுப்பாளையம் நகராட்சியில், 33 வார்டுகள் உள்ளன. நகரில் 'மக்களுடன் முதல்வர்' என்ற முகாம், டிச., 21, 26, 29, ஜன., 4, 6 ஆகிய ஐந்து தேதிகளில், ஐந்து இடங்களில் நடந்தன. ஒவ்வொரு முகாமிலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சித்துறை, சமூக நலத்துறை, மின்சாரம், காவல்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை உள்பட, 13 துறைகள் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கொடுத்தனர். மனுக்களை பெற்ற துறை உயர் அதிகாரிகள், 30 நாட்களுக்குள், உங்கள் கோரிக்கை மனுக்கள் மீது விசாரணை நடத்தி, தீர்வு காணப்படும் என கூறினர். முதல் முகாம் நடந்து முடிந்து, 35 நாட்கள் ஆகின்றன. பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது, நடவடிக்கை எடுத்தார்களா என்ற விபரம், இதுவரை சம்பந்தப்பட்டவர்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.இந்நிலையில் தமிழக அரசு 'உங்களை தேடி உங்கள் ஊரில்' என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. கோவை மாவட்டத்தில், மேட்டுப்பாளையத்தில் இன்று இத்திட்டம் துவங்குகிறது. இதில் மாவட்ட கலெக்டர் மற்றும் முதுநிலை அலுவலர்கள் பங்கேற்று, நாள் முழுவதும் மேட்டுப்பாளையத்தில் இருந்து, பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தில் பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு, இதுவரை தீர்வு ஏதும் கிடைக்கவில்லை.இந்நிலையில் நடைபெறும் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' என்ற திட்டத்திலும், பொதுமக்கள் அதே கோரிக்கை மனுக்களை வழங்க வாய்ப்புள்ளது. எனவே மக்களுடன் முதல்வர் திட்டத்தில், பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது, மாவட்ட கலெக்டரின் நடவடிக்கையால், தீர்வு கிடைக்குமா என, பொதுமக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.