யானை தாக்கி தொழிலாளி பலி; குடும்பத்தினருக்கு வனத்துறை நிதி
கோத்தகிரி; கோத்தகிரி அருகே, யானை தாக்கியதில் பழங்குடி தொழிலாளி பலியான சம்பவத்தில், அவரின் குடும்பத்தினருக்கு வனத்துறை சார்பில் நிதிஉதவி வழங்கப்பட்டது. கீழ்கோத்தகிரி வனச்சரகம், சோலுார் மட்டம் பிரிவு, கெங்கரை ஊராட்சி வாகப்பனை இருளர் கிராமத்தை சேர்ந்தவர் பால்ராஜ் என்பவரது மகன் காரமடை, 33. கூலி தொழிலாளியான இவர், வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கி கொண்டு, வாகப்பனை சரிவு காப்பு காட்டில் ஒத்தையடி பாதையில் சென்றுள்ளார். அப்போது, காட்டு யானை தாக்கியதில், சம்பவ இடத்திலேயே, காரமடை உயிரிழந்தார். தகவல் அறிந்த வனத்துறை மற்றும் காவல் துறையினர், உள்ளூர் பொதுமக்கள் உதவியுடன், சம்பவ இடத்திற்கு சென்று, உடலை மீட்டதுடன், பிரேத பரிசோதனைக்காக நள்ளிரவில் கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின், உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இறந்தவர் குடும்பத்திற்கு, வனத்துறை சார்பில் முதற்கட்டமாக, 50 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்பட்டது. மேலும், வாகபணை கிராமத்திற்கு சாலை வசதி இல்லை. இதனால், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், தொட்டில் கட்டி இரவு நேரத்தில் உடலை கொண்டு வந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த கிராமத்தை சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.