உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெரம்பலூர் / கயிறாகும் கந்தல் சேலைகள் இளம் தொழிலாளி அசத்தல்

கயிறாகும் கந்தல் சேலைகள் இளம் தொழிலாளி அசத்தல்

பெரம்பலுார்:பெரம்பலுார் மாவட்டம், கை.களத்துார் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா, 28; கயிறு திரிக்கும் தொழிலாளி. இவரது குடும்பத்தினர், தென்னை நார், புளிச்சை நார் ஆகியவற்றில் கயிறு தயாரித்து விற்றனர்.நைலான் கயிறு வருகையால் இவர்கள் தொழில் நலிவடைந்தது. இதனால், மாற்று தொழிலுக்கு செல்லலாம் என முடிவு செய்தபோது, கயிறு தயாரிக்கும் மிஷினில் தன் வீட்டிலிருந்த பழைய சேலை மற்றும் வேட்டிகளை பயன்படுத்தி கயிறு தயாரிக்கும் முயற்சியில் ராஜா ஈடுபட்டு, வெற்றியும் பெற்றார். தென்னை நார் கயிறுகளை விட சேலை, வேட்டிகளில் தயாரிக்கப்பட்ட கயிறுகள் உறுதியாக இருந்ததுடன், பல வண்ணங்களில், டிசைனுடன் நேர்த்தியாக இருந்தன. இதையடுத்து, கயிறு திரிக்கும் மிஷினை தன் டூ - வீலரில் எடுத்துக் கொண்டு தன் குடும்பத்தினருடன் பெரம்பலுார் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களுக்கு சென்று சேலை மற்றும் வேட்டிகளில் கயிறு தயாரித்து கொடுத்து அசத்தி வருகிறார். இதில், நல்ல வருமானமும் கிடைப்பதாக கூறுகிறார்.சேலை மற்றும் வேட்டிகளை, 5 செ.மீ., அகலத்தில் நீளவாக்கில் கிழித்து, அதன் துண்டு பகுதிகளை அடுத்தடுத்து இணைத்து கயிறு தயாரித்து கொடுக்கிறார். இதற்காக, சேலையில் கயிறு தயாரிக்க 30 ரூபாயும், வேட்டிக்கு 50 ரூபாயும் கூலியாக பெறுகிறார்.மக்களும் சேலை, வேட்டியில் கயிறு தயாரிக்க ஆர்வம் காட்டுகின்றனர். இந்த கயிறுகள் கட்டில் போட, கொடி கட்ட, கால்நடைகளை கட்ட, கீற்றுக்கொட்டகைகள், பந்தல் அமைக்க என, பல்வேறு வேலைகளுக்கு பயன்படுகிறது.சேலையில் தயாரிக்கப்படும் கயிறுகள் பல வண்ணங்களுடன் மிக அழகாக காட்சியளிக்கின்றன. தமிழக அரசால் வழங்கப்படும் இலவச வேட்டி, சேலைகள் இந்த வகையில் கயிறு தயாரிப்பதற்கு ஏதுவாக உள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை