ஓபி அடித்த டெக்னீஷியன்களால் ஊழியர்கள் மயக்கமானது அம்பலம்
பெரம்பலுார்:பெரம்பலுார் அரசு மருத்துவமனை ஆப்பரேஷன் தியேட்டரை டெக்னீஷியன்கள் சுத்தம் செய்யாமல், பயிற்சி இல்லாத துாய்மை பணியாளர்களை வைத்து சுத்தம் செய்ததால், அவர்கள் மயக்கமானதாக தகவல் வெளியாகி உள்ளது. பெரம்பலுார் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் துாய்மை பணியாளர்களாக உள்ள தனியார் நிறுவன ஊழியர்கள், 11 பேர் நேற்று முன்தினம், அங்குள்ள ஆப்பரேஷன் தியேட்டரில், லைசால் திரவத்தை தண்ணீரில் கலந்து தரையை சுத்தம் செய்தனர். அப்போது, வெண் புகை ஏற்பட்டு, மூச்சுவிட சிரமப்பட்டு, அடுத்தடுத்து மயங்கினர். இதில், அனைவரும் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெறுகின்றனர். அவர்கள், ஆப்பரேஷன் தியேட்டரில் கிருமி தொற்றை அகற்ற பார்மால்டிஹைடு நீராவி போன்ற குறிப்பிட்ட உயிர்க்கொல்லி வாயுக்களை பயன்படுத்தாமல், லைசால் பயன்படுத்தி உள்ளனர். பயிற்சி பெற்ற தியேட்டர் டெக்னீஷியன்கள் மூலம் சுத்தம் செய்யவில்லை. இப்பணி, செவிலியர், மயக்க டாக்டர்கள் முன்னிலையில் நடக்கவில்லை. மேலும், பயிற்சி பெறாத துாய்மை பணியாளர்கள் மூலம் சுத்தம் செய்ததால், அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதும், தியேட்டர் டெக்னீஷியன் ஒருவர் இருந்தும், அவர் எப்போதும் இப்பணியில் ஈடுபடுவது இல்லை என்ற தகவலும் தற்போது வெளியாகி உள்ளது. நலப்பணிகள் இணை இயக்குநர் மாரிமுத்து கூறுகையில், ''ஆப்பரேஷன் தியேட்டரை தனியார் ஊழியர்கள் சுத்தம் செய்தபோது, நெடி ஏற்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் மயங்கும் அளவிற்கு இல்லை. ''அவர்களுடன் செவிலி யர்களும் இருந்தனர். ஆனால், அவர்கள் மயக்கமடையவில்லை. ஊழியர்கள் மட்டும் ஏன் இப்போது இப்படி செய்கிறார்கள் என்பது தெரியவில்லை,'' என்றார்.