பெட்ரோல் பங்க்கில் மோசடி; வசமாக சிக்கிய மேலாளர்
பெரம்பலுார்; பெரம்பலுாரில், பெட்ரோல் பங்கில் முறைகேடாக 28.50 லட்சம் ரூபாய் நம்பிக்கை மோசடி செய்த மேலாளரை பெரம்பலுார் போலீசார் கைது செய்தனர்.அரியலுார் ராஜாஜி நகரைச் சேர்ந்தவர் கஜேந்திரன், 61. இவர், பெரம்பலுார் நான்கு ரோடு பகுதியில், சரவண பாலாஜி ஏஜன்சிஸ் என்ற பெயரில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார்.இவரது பெட்ரோல் பங்க்கில் முதுநிலை மேலாளராக, திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லுார் தாலுகா, காணக்கிளியநல்லுாரைச் சேர்ந்த சின்னசாமி மகன் சதீஷ், 37, என்பவர் பணிபுரிந்தார்.பெட்ரோல் பங்க்கின் வரவு-- - செலவு கணக்குகளை தணிக்கை செய்தபோது, 2022ம் ஆண்டு முதல் பணி செய்து வரும் மேலாளர் சதீஷ் பெட்ரோல் பங்க்கில் கணக்கில் காட்டப்படாமல் முறைகேடாக 28.46 லட்சம் ரூபாயை நம்பிக்கை மோசடி செய்தது தெரிந்தது.இதுகுறித்து, பெட்ரோல் பங்க் உரிமையாளர் கஜேந்திரன் கொடுத்த புகாரில், பெரம்பலுார் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து சதீஷை நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.