உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெரம்பலூர் / கிடப்பில் சிறப்பு பொருளாதார மண்டலம் 2,937 ஏக்கர் நிலம் திருப்பி தர கோரிக்கை

கிடப்பில் சிறப்பு பொருளாதார மண்டலம் 2,937 ஏக்கர் நிலம் திருப்பி தர கோரிக்கை

பெரம்பலுார்:-சிறப்பு பொருளாதார மண்டலத்துக்கு கையகப்படுத்தி, தரிசாக கிடக்கும், 2,937 ஏக்கர் விளை நிலத்தை, விவசாயிகளிடம் திருப்பி ஒப்படைக்க, அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 'பெரம்பலுார் மாவட்டம், திருமாந்துறை கிராமத்தில், சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்படும்' என, 2007ல், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆந்திராவை சேர்ந்த ஜி.வி.கே., குழுமம், இந்திய அரசின் பெருவணிக துறையான டெட்கோவுடன் இணைந்து, இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தது. இதற்காக, 2007ல் பெரம்பலுார் மாவட்டம், சின்னாறு, எறையூர், பெருமத்துார், மிளகாநத்தம், பென்னக்கோணம், லெப்பைக்குடிகாடு, திருமாந்துறை, வ.கீரனுார், அயன்பேரையூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த, 1,125 விவசாயிகளிடம் இருந்து, 2,937 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தினர். அருகில் இருந்த 300 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தையும் கையகப் படுத்தினர். சிறப்பு பொருளாதார மண்டல திட்டத்தை துவங்காமல், அந்த நிறுவனம் கையகப்படுத்திய நிலங்களை, மூன்று வங்கிகளில் அடகு வைத்து, 1,200 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது. இது தொடர்பான வழக்கு, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், சிறப்பு பொருளாதார மண்டல திட்டத்தை செயல்படுத்த வேண்டும் அல்லது கையகப்படுத்திய நிலத்தை விவசாயிகளிடமே திருப்பி ஒப்படைக்க வேண்டும் என, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து போராடி வருகின்றன. கடந்த, 2013ல் முதல்வராக இருந்த ஜெயலலிதா, சிறப்பு பொருளாதார மண்டலத்திற்காக கையகப்படுத்திய பகுதியில், 827 கோடியில், விமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும் என, 110 விதியின் கீழ் சட்டசபையில் அறிவித்தார். இதற்கான, ஒப்பந்த பத்திரமும் வழங்கப்பட்டது. ஆனால், 18 ஆண்டுகள் கடந்தும், சிறப்பு பொருளாதார மண்டல திட்டம் இதுவரை செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் படி, ஐந்து ஆண்டுகளுக்குள் திட்டத்தை செயல்படுத்தாத பட்சத்தில் கையகப்படுத்திய நிலங்களை, விவசாயிகளிடமே ஒப்படைக்க வேண்டும். அதனால், கையகப்படுத்திய நிலத்தை, விவசாயிகளிடம் திருப்பி ஒப்படைக்க அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் செல்லதுரை கூறியதாவது: சிறப்பு பொருளாதார மண்டலத்துக்கு கையகப்படுத்திய விவசாயிகள் நிலத்தை, திருப்பி ஒப்படைக்கக் கோரி, 15 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகிறோம். அரசு விதிமுறைப்படி கையகப்படுத்திய நிலத்தில், ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக திட்டத்தை செயல்படுத்தாத ஜி.வி.கே., குழுமத்திடம் உள்ள நிலங்களை பறிமுதல் செய்து, விவசாயிகளிடமே வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ