18ம் நுாற்றாண்டு சிலை ஆரியூரில் கண்டெடுப்பு
புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அரசு கலை அறிவியல் கல்லுாரி தமிழ்த்துறை தலைவர் காளிதாஸ், பேராசிரியர் மணிவண்ணன் கொண்ட குழுவினர் அன்னவாசல் அருகே ஆரியூரில் கல்வெட்டு தொடர்பாக கள ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, ஆரியூர் ஊருக்குள் செல்லும் சாலையில் 50 மீட்டர் துாரத்தில் மரத்தில் சாத்தப்பட்ட நிலையில் இரு துண்டுகளாக உடைந்த நிலையில், 18ம் நுாற்றாண்டைச் சேர்ந்த அய்யனார் கற்சிலை காணப்பட்டது. இதை ஊர்மக்கள் தலைவிரிச்சாங்காளி என, அழைத்து வருகின்றனர்.காளிதாஸ் கூறியதாவது:அய்யனார் வழிபாடு, ஆசீவக சமய வழிபாட்டு முறையாகும். இந்த சிலையானது, 1.5 அடி உயரமும், அரை அடி அகலமும் கொண்டது. ஜடாமகுட சடாபாரத்துடன் காதுகளில் குண்டலங்கள் அணிந்தும், கழுத்தில் ஆபரணங்களுடன் மார்பில் முப்புரி நுால் கொண்டும், இடையணியும் கச்சையும் அணிந்து காணப்படுகிறது.இரு கைகளிலும் கவுடர் என்னும் கைத்தண்டைக் காப்புகள் அணிந்தும், வலது காலை நீட்டியும், இடது காலை மடக்கியும், இடுப்பையும், இடது காலையும் இணைக்கும் நிட்டை யோகப்பட்டை அணிந்தும் அமர்ந்த கோலத்தில் அபயகரத்துடன் காட்சி தருகிறது.சாட்டையுடன் கூடிய வலது கரம் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. இந்த அய்யனார் சிலையை யாரோ சமூக விரோதிகள் உடைத்திருக்கலாம். இதுபோன்ற தொல்லியல் மரபுச் சின்னங்களை பாதுகாக்க வேண்டியது கடமை.இவ்வாறு அவர் கூறினார்.