முக்கிய ஆவணங்கள் குப்பையில் வீச்சு; உறுதி ஏற்பு நிகழ்ச்சியில் கலெக்டர் ஷாக்
புதுக்கோட்டை:புதுக்கோட்டையில் நடந்த குப்பை சேகரிப்பு உறுதிமொழி நிகழ்ச்சியில், கலெக்டர் அலுவலகத்தின் முக்கிய ஆவணங்களை ஊழியர்கள் குப்பையில் போட்டதால், கலெக்டர் அருணா அதிர்ச்சியடைந்தார். புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில், துாய்மை இயக்கம் 2.0 திட்டத்தில், குப்பை சேகரிக்கும் முறை குறித்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. அரசு அலுவலகங்கள் மற்றும் சுற்றுப்புறத்தை துாய்மையாக வைத்திருக்க வேண்டும். அலுவலகங்களில் காகித பயன்பாட்டை குறைப்பதற்கான முயற்சிகள் குறித்து துாய்மை பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர். கலெக்டர் அருணா தலைமையில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் உட்பட பலர் உறுதி மொழி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். குப்பை சேகரித்து, அழிப்பது குறித்த செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. அதற்காக, கலெக்டர் அலுவலகத்தில் பயன்படுத்தப்படாத ஜெராக்ஸ் மிஷின், கீ போர்டு, ஜெராக்ஸ் பேப்பர்கள் உள்ளிட்ட பழைய பொருட்கள் கொண்டு வரப்பட்டன. அவற்றை, கலெக்டர் அருணா ஆய்வு செய்த போது, அதில் துறை ரீதியான கலெக்டரின் ஆவணங்கள், ஜெராக்ஸ் மற்றும் இரண்டு ஆண்டுக்கு முந்தைய அரசு ஆவணங்களின் ஜெராக்ஸ்கள் இருந்தன. அதிர்ச்சியடைந்த கலெக்டர் அருணா, அலுவலர்களை அழைத்து கண்டித்ததோடு, பாதுகாக்கப்பட வேண்டிய ஆவணங்களை முறையாக கையாள வேண்டும் என, அறிவுறுத்தினார். அந்த ஆவணங்களை மீண்டும் அலுவலகத்திற்கு எடுத்துச் செல்ல உத்தரவிட்டார். அமைச்சரும் அரசின் கோப்புகள், பேப்பர்கள் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும் என, ஊழியர்களுக்கு அறிவுறுத்தி புறப்பட்டார்.