புதுக்கோட்டை: 'புதுக்கோட்டை மாவட்டத்தில், மணல் கடத்தலை தடுத்ததற்காக, கிராம நிர்வாக அலுவலர் பழிவாங்கப்படுகிறார். அவர் மீதான வழக்குகளை கைவிட வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலினுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் சண்முகம் கடிதம் எழுதி உள்ளார். அவர் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, வாண்டார்கோட்டை கிராமத்தை சேர்ந்த ஜெயரவிவர்மா, கோவிலுார் வி.ஏ.ஓ.,வாக பணியாற்றி வந்தார். மணல் திருட்டை தடுக்க, முக்கிய பங்காற்றி இருக்கிறார். மணல் திருட்டை கண்காணிக்க நியமித்த சிறப்பு குழு, வி.ஏ.ஓ., மணல் திருடுவதாக கூறி, கைது செய்துள்ளது. தாசில்தார் போலீஸ் நிலையம் வந்து, தன் உத்தரவில், வி.ஏ.ஓ., பணி செய்வதாக தெரிவித்தும், அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். நீதிமன்றத்தில் தாசில்தாரின் உத்தரவை ஏற்று, அவரை விடுதலை செய்து, வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பட்டியல் சமூகத்தை சேர்ந்த வி.ஏ.ஓ., மணல் திருட்டை தடுக்க, தாசில்தாரின் உத்தரவோடு செயல்பட்டதற்காக, வழக்குகளை சந்தித்து வருகிறார். அவர் மீதான அனைத்து வழக்குகளையும் கைவிட வேண்டும். 'சஸ்பெண்ட்' உத்தரவை ரத்து செய்து, பணி வழங்க வேண்டும். சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.