புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் இருந்து அதிவேக எப்.டி.டி.எச்., இணைப்புகள் ஆல்பா என்ற தனியார் ஏஜென்சியால் நகர்ப்புற மற்றும் ஊர்ப்புறங்களில் வீடுகள், வணிக நிறுவனங்கள், வங்கிகள், அரசு அலுவலகங்கள், போலீஸ் ஸ்டேசன், வங்கிகள் மற்றும் இன்டர்நெட் சென்டர், இ-சேவை மையங்கள், இதர நிறுவனங்கள் இணையதள சேவை பி.எஸ்.என்.எல்., பைபர் கேபிள் வாயிலாக இன்டர்நெட்டை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த பைபர் கேபிளை மர்ம நபர்கள் சிலர் பி.எஸ்.என்.எல்., அலுவலகத்திலிருந்து காமராஜர் சிலை பஸ் ஸ்டாப் வரை, 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, 5 மாதங்களில் 99 தடவை பைபர் கேபிளை இரவு நேரங்களில் திருடியுள்ளனர். இதனால், இன்டர்நெட் சேவை பாதிக்கப்படுகிறது.இதை, ஆலங்குடி பேரூராட்சிக்குபட்ட பல்வேறு பகுதிகளில் கடைகளில் அமைக்கப்பட்டுள்ள 'சிசிடிவி' கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டும் இதுவரை அந்த மர்ம நபர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால், செய்வதறியாது திகைத்த தனியார் நிர்வாகத்தினர் சமூக வலைதளத்தில் திரைப்பட நடிகர் வடிவேலுவின் புகைப்படத்துடன் ஒரு போஸ்டரை உலா விட்டுள்ளனர். அதில், 'வாழ்த்துகிறோம். இன்டெர்நட் கேபிள் திருடா ஆலங்குடிக்கு டப் கொடுக்கும் எங்கள் ஆருயிர் திருடனே சிசிடிவிக்கே தண்ணி காட்டும் எங்கள் திருடர் குல திலகமே அண்ணன் ஸ்டைல் ஸ்பிளண்டர் பாண்டி அவர்களது, 300வது திருட்டு விழா வெற்றி பெறுவும், 5 ஆண்டுகளில் இல்லாததை இந்த 5 மாதங்களில் திருடி அசத்தி காட்டிய எங்கள் திருடனே... 100-வது பைபர் கேபிள் திருட்டு சாதனை விழாவை வாழ்த்த முடியாததால், கேபிள் பாக்ஸ் மட்டும் இல்லாமல் பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தையே கொள்ளையடிக்கவும். 'மேலும், உங்கள் திருட்டு தொழிலை இரவில் மட்டும் இல்லாமல் பகலிலும் கூட்டாளிகளோடு திருடி பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களை தொந்தரவு செய்து துரிதமாக 1000வது திருட்டு விழாவை தாங்கள் கொண்டாட மனமார வாழ்த்துகிறோம்' என உள்ளது. இந்த போஸ்டர் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.