2 மகள்களுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி சிக்கினார் 52 நாளுக்கு பின் உடல் தோண்டி எடுப்பு
புதுக்கோட்டை:  திருமயம் அருகே கணவன் - மனைவி தகராறில் கணவனை அடித்து கொலை செய்து விட்டு, வீட்டின் அருகே புதைத்து  நாடகமாடிய மனைவி கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த இரண்டு மகள்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  
சந்தேகம் 
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே மல்லாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேலு, 55, இவரது மனைவி மகாலட்சுமி, 44. தம்பதிக்கு தமிழ்ச்செல்வி, 25, சாரதா, 20, என இரு மகள்கள் உள்ளனர். மகாலட்சுமியின் நடத்தையில் பழனிவேலு சந்தேகப்பட்டு, அவரை கண்டித்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 52 நாட்களுக்கு முன், மகாலட்சுமிக்கும், பழனிவேலுக்கும் வழக்கம் போல் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மகாலட்சுமி கணவர் பழனிவேலுவை தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்ததாக தெரிகிறது. தொடர்ந்து, மகாலட்சுமி அவரது மகள்கள் தமிழ்ச்செல்வி, சாரதா உதவியுடன், வீட்டின் அருகே குழி தோண்டி பழனிவேலுவின் இறந்த உடலை புதைத்தனர். பின், எதுவுமே நடக்காதது போல மூன்று பேரும் இருந்தனர். நீ ண்ட நாட்களாக பழனிவேலு வீட்டுக்கு வராததால் சந்தேகம் அடைந்த பழனிவேலுவின் சகோதரி காவேரி, 45, என்பவர் பழனிவேலுவை காணவில்லை என நமணசமுத்திரம் போலீசில், மூன்று நாட்களுக்கு முன் புகார் அளித்தார். புகாரை விசாரிக்க பழனிவேலு வீட்டிற்கு போலீசார் சென்ற போது, மகாலட்சுமி அவரது மகள்கள் தமிழ்ச்செல்வி, சாரதா தலைமறைவாகி விட்டனர்.  விசாரணை 
இந்நிலையில், திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கிராமத்தில் மகாலட்சுமி தன் மகள்களுடன் பதுங்கியிருந்தார். அங்கு சென்ற போலீசார், மூவரையும் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், பழனிவேலுவை கொலை செய்ததை மகாலட்சுமி ஒப்புக் கொண்டார். பின், உடல் புதைக்கப்பட்ட இடத்தை அவர் காண்பித்தார். திருமயம் தாசில்தார் வரதராஜன் முன்னிலையில், உடலை தோண்டி எடுத்து போலீசார் விசாரிக்கின்றனர்.