| ADDED : ஆக 19, 2024 07:16 AM
ராமநாதபுரம்: -ஈரோடு மாவட்டம் பவானிசாகர் எரங்காட்டூர் பகுதியில் ஆணவக்கொலை வழக்கில் நிபந்தனை ஜாமின் பெற்று ராமநாதபுரம் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட்டு வந்த பெண்ணை வெட்டியவழக்கில் சிறுவன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.பவானிசாகர் ஏரங்காட்டூர் குருவாயூரப்பன் நகர் பகுதியை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் மகன் சுபாஷ் 24. இவர் சத்தியமங்கலம் காந்தி நகர் சந்திரன் மகள் மஞ்சுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மஞ்சுவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக சுபாைஷ ஆணவ கொலை செய்ய முடிவு செய்தனர். சுபாஷ் தனது தங்கை ஹாசினி 16, என்பவரை டூவீலரில் ஏற்றிக்கொண்டு சத்தியமங்கலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு அழைத்து சென்றார். அப்போது மஞ்சுவின் பெற்றோர் சுபாஷ் டூவீலரின் பின்புறம் வேனை மோதி கொலை செய்ய முயற்சித்தனர். இதில் டூவீலரின் பின்னால் அமர்ந்து சென்ற ஹாசினி உயிரிழந்தார். சுபாஷ் உயிர் தப்பினார்.இது குறித்து பாவனி சாகர் போலீசில் வன்கொடுமை தடுப்பு சட்டம், மற்றும் கொலை வழக்குப்பதிவு செய்து மஞ்சுவின் பெற்றோர் உட்பட 6 பேரை கைது செய்தனர். இதில் மஞ்சுவின் தாய் சித்ரா 42, நீதிமன்றத்தில் ஜாமின் பெற்றார். இவரை ராமநாதபுரம் போலீசில் தினமும் கையெழுத்திடும்படி உத்தரவிடப்பட்டது.ராமநாதபுரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி நகர் போலீஸ் ஸ்டேஷனில் ஆக.,15ல் கையெழுத்திட்டுவிட்டு சித்ரா டூவீலரில் திரும்பி வரும்போது அவரை சுபாஷ், நண்பர்கள் சேர்ந்து அரிவாளால் வெட்டினர். காயமடைந்த சித்ரா மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து பஜார் போலீசார் சுபாஷ் , மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி மகன் மோகன்ராஜ் 26, அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர்.சுபாஷ், மோகன்ராஜ் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 17 வயது சிறுவன் மதுரை சீர்திருத்தப்பள்ளியில் சேர்க்கப்பட்டார்.