| ADDED : ஜூலை 16, 2024 05:37 AM
திருவாடானை : திருவாடானை அருகே துத்தாகுடி கிராமத்தில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை திட்டத்தில் ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைத்தல் தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது.வேளாண் உதவி இயக்குநர் (தரக்கட்டுபாடு) நாகராஜன் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் ரஷிலா முன்னிலை வகித்தார். விவசாயிகள் பயிரிடும் பயிர்களுக்கு ஏற்ற சமச்சீர் உர மேலாண்மை மூலம் ரசாயன உர பயன்பாட்டை குறைத்து மண் வளத்தை பாதுகாக்க வேண்டும். பசுந்தாள் உரப்பயிர்களான சனப்பு, தக்கைப்பூண்டு, கொளுஞ்சி போன்றவற்றை பயிரிட்டு பூக்கும் தருவாயில் மடக்கி உழுவதன் மூலம் மண்ணின் வளம் பாதுகாக்கப்படும்.முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில் விவசாயிகளுக்கு பசுந்தாள் உரப்பயிர் விதைகள் 50 சதவீதம் மானியத்தில் விநியோகம் செய்யப்பட இருப்பதால் விவசாயிகள் பயனடையலாம்.எருக்கு, வேப்பிலை, நொச்சி, ஆவாரை, புங்கன் போன்ற பசுந்தழைகளை மண்ணில் இட்டு உழுவதன் மூலம் மண்ணில் கரிமச்சத்து அதிகரிக்கிறது.இயற்கை உரங்கள், நுண்ணுாட்ட உரங்கள் போன்றவற்றை இட்டு பயன் பெறுமாறு அலுவலர்கள் பேசினர்.வேளாண் அலுவலர் தினேஷ்வரி, வட்டார தொழில்நுட்ப மேலாளர் அன்னலட்சுமி, கலைவாணி, ராஜேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர். வேளாண் தொழில் நுட்ப மேலாளர் வேல்முருகன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.