| ADDED : ஆக 22, 2024 02:30 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் சந்தைக்கு வெளி மாவட்டங்களிலிருந்து வாழைப்பழங்கள் வரத்துகுறைந்துள்ளதால் விலை இருமடங்கு அதிகரித்து12 முதல் 14 பழங்கள் உள்ள சீப்பு ரூ.50 முதல் ரூ.70க்கு விற்கப்படுகிறது.ராமநாதபுரம் மாவட்டத்தில் வாழை சாகுபடி மிகக்குறைந்த அளவே நடக்கிறது. பெரும்பாலான பழங்கள் மதுரை, துாத்துக்குடி, புதுக்கோட்டை பகுதிகளிலிருந்து ராமநாதபுரம் சந்தைக்கு விற்பனைக்கு வருகிறது. தற்சமயம் மழை, பலத்த காற்று காரணமாக வாழைப்பழங்கள் வரத்து குறைந்துள்ளது.இதன் காரணமாக கடந்த மாதம் 12 முதல் 14 பழங்கள் அடங்கிய சீப் ரூ.25 முதல் ரூ.30 வரை விற்றது தற்போது இருமடங்கு விலை அதிகரித்துள்ளது.சாயல்குடி வியாபாரி முனியசாமி கூறுகையில், புதுக்கோட்டை, துாத்துக்குடியிலிருந்து மொத்தமாக தார் கணக்கில் வாழைப்பழம் வாங்குகிறோம். தற்போது ஆவணி முகூர்த்தம், கோயில் விழாக்கள் காரணமாக தேவை அதிகரித்துள்ளது. பூவன் ரூ.50க்கும், நாட்டு பழம், ரஸ்தாளி ரூ.80க்கும் விற்கிறோம். விநாயகர் சதுர்த்தி வரை விலை குறைய வாய்ப்பு இல்லை என்றார்.