தட்டச்சு தேர்வில் கேள்வித்தாள் புரியாமல் தேர்வர்கள் தவிப்பு
பரமக்குடி: -ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இரண்டு நாட்களாக நடந்த தட்டச்சு தேர்வில் 2000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து கேள்வித்தாளில் வார்த்தைகள் புரியாததால் தேர்வர்கள் சிரமம் அடைந்தனர்.தமிழகத்தில் தட்டச்சு தேர்வுகள் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் மூலம் நடக்கிறது. இதன்படி ஆக., 31, செப்.,1 ல் தமிழ், ஆங்கிலம், உயர்வேக தட்டச்சு தேர்வுகள் நடந்தன. பரமக்குடியில் நடந்த தேர்வில் பிரீ ஜூனியர், ஜூனியர், சீனியர், ஹை ஸ்பீடு பிரிவுகளில் 2000க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு தேர்விற்கும் 10 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை வழங்கப்பட்டது.இந்நிலையில் தட்டச்சு தேர்விற்கு வழங்கப்பட்ட கேள்வித்தாள் கையால் எழுதப்பட்ட நிலையில் ஆங்கில வார்த்தைகள் புரியாதவாறு இருந்தன. இதனால் தேர்வர்கள் தட்டச்சு செய்வதில் குழப்பம் ஏற்பட்டதால் பலரும் விரக்தியுடன் தேர்வு எழுதியதாக தெரிவித்தனர்.ஒவ்வொரு தட்டச்சர் தேர்வு எழுதுவோரும் பல மாதங்கள் ரூ.பல ஆயிரம் செலவு செய்து பயிற்சி பெறுகின்றனர். இதனால் தேர்வுகளில் குளறுபடி இல்லாமல் தெளிவாக வழங்க துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்வர்கள் வலியுறுத்தினர்.