ஊரக வளர்ச்சித்துறை சங்க மாநாட்டில் மோதல் ஊர்வலம் ரத்து
ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் நடந்த ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில மாநாட்டில் நடந்த புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டத்தில் இருதரப்பினரிடையே கைகலப்பு, மோதல் ஏற்பட்டதால் நேற்று நடக்க இருந்த பொது மாநாடு, ஊர்வலம் ரத்து செய்யப்பட்டன.தமிழ்நாடு ஊரக வளர்ச்சிதுறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில மாநாடு ராமநாதபுரத்தில் தனியார் மகாலில் பிப்.20, 21ல் நடந்தது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இரண்டாம் நாளான நேற்று மதியம் புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டம் நடந்தது. மாநில தலைவர் ரமேஷ் விரைவில் பணி ஓய்வு பெற உள்ளார். மாநில பொதுச்செயலாளர் உதவி இயக்குநராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.எனவே அவர்களுக்கு பதில் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய வேண்டும் என சில மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு 20 மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். ஒரு கட்டத்தில் இருதரப்பினரும் மேடையில் ஏறியதால் கைகலப்பு, மோதல் ஏற்பட்டது.சில மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தை விட்டு வெளியே வந்து தற்போதைய நிர்வாகத்திற்கு எதிராக கோஷமிட்டனர். இதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டனர்.சங்க மாநில தலைவர் ரமேஷ் கூறுகையில், மாநாட்டில் 150 முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளோம்.நிர்வாகிகள் தேர்வு இன்று நடைபெறவில்லை. நிர்வாகிகள் தேர்வில் கட்சி சார்ந்த தலையீடு உள்ளதாகக் கூறுகின்றனர். மாநில, மாவட்ட நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்து நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்படும்.சிலர் மாநில தலைவர், செயலாளர் என கூறுவது செல்லத்தக்கது அல்ல. இன்றைய (நேற்று) பொது மாநாடு, ஊர்வலம் ஆகிய நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. உறுப்பினர் சேர்க்கையிலும் முறைகேடு உள்ளதா என ஆய்வு செய்யப்படும் என்றார். ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் மாநாட்டில் இரு தரப்பு மோதலை தொடர்ந்து தற்போதைய மாநில தலைவர் ரமேஷ் தரப்பினர் நிர்வாகிகள் தேர்வு, ஊர்வலம், பொது மாநாடு ரத்து செய்யப்பட்டதாக கூறி சென்றனர்.இந்நிலையில் போட்டியாளர்கள் தலைவர் உட்பட புதிய மாநில நிர்வாகிகளை தேர்வு செய்து வெளிட்டதோடு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றியதாக அறிவித்துள்ளனர்.அதன்படி புதிய மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்ட காந்திமதி நாதன் கூறியதாவது:தேர்தல் ஆணையரால் நியமிக்கப்பட்ட 85 சதவீத நிர்வாகிகள் ஆதரவுடன் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். சிலர் எதிர்ப்பு தெரிவித்து பிரச்னை செய்துள்ளனர். பொது மாநாடு ரத்து செய்யப்படவில்லை நடந்தது. ஊர்வலம் மட்டும் நேரமின்மை காரணமாக நடைபெறவில்லை.காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஆய்வு கூட்டம் என்ற பெயரில் அலைக்கழிப்பு செய்யக்கூடாது உள்ளிட்ட 21 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மார்ச் 13ல் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றார்.