| ADDED : ஆக 20, 2024 04:29 AM
ராமேஸ்வரம்: சூறாவளி வீசுவதால் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பாம்பனில் வனத்துறையினரின் சுற்றுலாப் படகுகள் சவாரிக்கு தடை விதிக்கப்பட்டது.ராமேஸ்வரம், பாம்பன் தீவுப்பகுதியில் தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்து சூறாவளியாக வீசுகிறது. மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் சூறாவளிவீசி மன்னார் வளைகுடா கடலில் கொந்தளிப்பு ஏற்படும் என வானிலை மையம் தெரிவித்தது.நேற்று காலை முதல் தனுஷ்கோடி, பாம்பன் தென் கடலான மன்னார் வளைகுடா கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்தன. நேற்று பெரும்பாலான நாட்டுப்படகு மீனவர்கள் மன்னார் வளைகுடா கடலில் மீன்பிடிக்க செல்வதை தவிர்த்தனர்.கடல் கொந்தளிப்பால் பாம்பன் குந்துகாலில் இருந்து குருசடை தீவுக்கு வனத்துறை நடத்தும் சுற்றுலாப் படகுகள் சவாரி நிறுத்தப்பட்டது. ஆக., 24 வரை சூறாவளி, கடல் கொந்தளிப்பு இருக்கும் என வானிலை மையம் தெரிவித்ததால் அலையின் வேகம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை படகு சவாரிக்கு தடை விதிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.