| ADDED : ஜூன் 21, 2024 04:03 AM
சாயல்குடி: -சாயல்குடி, கடலாடி, காவாக்குளம், மேலச்செல்வனுார், கீழச்செல்வனுார், கடுகுச்சந்தை, பூப்பாண்டியபுரம், நரிப்பையூர், கன்னிராஜபுரம் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் பல லட்சம் பனை மரங்கள் உள்ளன.பனை மரத் தொழிலை நம்பி பல ஆயிரம் குடும்பங்களும் உள்ளன.நேரடியாகவும், மறைமுகமாகவும் பனை சார்ந்த உற்பத்தி பொருள்களை நம்பி வாழ்வாதாரம் உள்ளது.பனை பொருள் உற்பத்தி நலவாரியம் சார்பில் பனைத் தொழிலாளர்களுக்கு உரிய முறையில் மருத்துவ முகாம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. கடலாடி ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் ஆத்தி கூறியதாவது:பனை சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்யும் பனைத்தொழிலாளர்களுக்கு மாதம் ஒரு முறை சம்பந்தப்பட்ட ஊர்களில் மருத்துவ முகாம் நடத்த வேண்டும்.முறையான பனைத் தொழிலாளர்களை கண்டறிந்து அவர்களுக்கான பனை உற்பத்தி தளவாடப் பொருட்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.நடப்பு ஆண்டில் பதநீர் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது.எனவே உரிய முறையில் மீனவர்களுக்கு வழங்குவதை போன்று பனைத் தொழிலாளர்களுக்கும் நிவாரண உதவித் தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.