உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஒப்பந்த அடிப்படையில் ஈரான் சென்ற மீனவர்கள் கடல் வழியே தப்பி வந்தனர்:சம்பளம், உணவு கொடுக்கவில்லை என புகார்

ஒப்பந்த அடிப்படையில் ஈரான் சென்ற மீனவர்கள் கடல் வழியே தப்பி வந்தனர்:சம்பளம், உணவு கொடுக்கவில்லை என புகார்

ஆர்.எஸ்.மங்கலம்:ஒப்பந்த அடிப்படையில் ஈரான் நாட்டிற்கு மீன்பிடிக்க சென்ற ஆறு தமிழக மீனவர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் துன்புறுத்தியதால் கடல் மார்க்கமாக படகில் தப்பி தமிழகம் வந்தனர்.ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர்கள் அருண் தயாளன் 28, மித்திய தயாளன் 31, கவின் குமார் 24, ராமநாதபுரம் அருகே வழுதுார் ராஜேந்திரன் 37, பாசிபட்டினம் முனீஸ்வரன் 35, கன்னியாகுமரி மரிய தேனில் 38, ஆகியோரில் மரியதேனில், ராஜேந்திரன் ஆகியோர் ஓராண்டிற்கு முன்பும், மற்றவர்கள் கடந்த ஆண்டு செப்டம்பரில் ஈரான் நாட்டிற்கு ஒப்பந்த அடிப்படையில் மீன்பிடி தொழிலுக்கு சென்றனர்.அங்கு வேலை கொடுத்த அராபி உரிமையாளர் செய்யது சவூத் மீனவர்களுக்கு முறையான சம்பளம் கொடுக்காமலும், உணவு கொடுக்காமலும் துன்புறுத்தியுள்ளார். இதனால் அங்கிருந்து தப்ப முடிவு செய்த மீனவர்கள் வழக்கமாக மீன் பிடிக்க செல்வது போல் சென்றனர்.மீன் பிடிக்க பயன்படுத்திய படகில் அங்கிருந்து ஆறு மீனவர்களும் கடல் மார்க்கமாக இந்தியா நோக்கி வந்துள்ளனர். இந்நிலையில் ஓமன் நாட்டை ஒட்டிய கடல் எல்லையில் வந்த போது தப்பி வந்த படகில் டீசல் காலியானதால் அப்பகுதியில் தத்தளித்துள்ளனர்.அப்போது ஓமன் நாட்டு கடற்பறையினர் விசாரணை செய்து மீனவர்களின் நிலை அறிந்து உதவி செய்துள்ளனர். தொடர்ந்து சர்வதேச கடல் பகுதியில் அமெரிக்க கடற்படையினரும் உதவி செய்து இந்திய கடல் பகுதிக்கு செல்வதற்கான பாதையில் அனுப்பி உள்ளனர்.தொடர்ந்து ஒரு வாரமாக கடலில் உணவின்றி பயணம் மேற்கொண்ட மீனவர்கள் ஆறு பேரும் மே 6ல் கேரளா கொச்சின் வந்தடைந்தனர். கடற்படையினர் அவர்களிடம் விசாரணை செய்து ஆறு மீனவர்களையும் தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர். நேற்று மீனவர்கள் சொந்த ஊர் சென்றடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்