சிறப்பு பள்ளி ஆசிரியர்கள் சம்பளத்திற்கு நிதி ஒதுக்கீடு
ராமநாதபுரம்:நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மொழிப்பாடங்கள் கற்பிக்கும் சிறப்பு ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.அரசு உதவி பெறும் சிறப்பு பள்ளிகளில் சமஸ்கிருதம், அரபி மொழிப்பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு நிதி ஒதுக்கீடு இல்லாததால், பிப்., மாத சம்பளம் கிடைக்குமா என, தவிப்பில் இருந்தனர். இதுகுறித்து, நம் நாளிதழில் கடந்த 24ல் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக அரசு ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை இணையதளத்தில் சம்பள, 'பில்' போடுவதற்கான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. சிறப்பு பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்துள்ளதால் சம்பள பில் போடப்பட்டு, பள்ளிகள் வாயிலாக கருவூலத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனால், பிப்., சம்பளம் மார்ச்சில் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக சிறப்பு பள்ளி ஆசிரியர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.