| ADDED : ஏப் 30, 2024 08:31 PM
ராமநாதபுரம்:-ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே ராசிகுளம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார், 27; தனியார் நிறுவன பணியாளர். இவரது மனைவி கனகவல்லி, 24. கர்ப்பிணியான இவருக்கு ஏப். 27ம் தேதி இரவு 12:00 மணிக்கு பனிக்குடம் உடைந்தது. சாயல்குடி அரசு மருத்துவமனை சென்றனர். கனகவல்லியை பரிசோதித்த டாக்டர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினார். ராமநாதபுரத்தில் ஒருநாள் முழுதும் தாமதித்து மறுநாள் அதிகாலை, 3:00 மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது.குழந்தை பிறந்ததில் இருந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தது. சரியான சிகிச்சை அளிக்காததால் நேற்று முன் தினம் மதியம், 2:30 மணிக்கு குழந்தை இறந்ததாக கூறி கனகவல்லியின் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.குழந்தை உடலை வாங்க மறுத்தனர். போலீசார் அவர்களுடன் பேச்சு நடத்தினர். மாலை 5:30 மணிக்கு குழந்தையின் உடலை பெற்றுக் கொண்ட உறவினர்கள், போராட்டத்தை கைவிட்டனர்.