புதிய வத்தலுக்கு மவுசு; பழையது விலை வீழ்ச்சி
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலத்தில் விற்பனைக்கு வந்திருந்த புதிய மிளகாய் வத்தலுக்கு மவுசு ஏற்பட்ட நிலையில் பழைய வத்தல் கடும் விலை வீழ்ச்சியை சந்தித்ததால் பழைய வத்தலை விற்பனைக்கு கொண்டு வந்திருந்த விவசாயிகள் பாதிப்படைந்தனர்.மாவட்டத்தில் ஆர்.எஸ்.மங்கலம், பரமக்குடி, முதுகுளத்துார் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் அதிகளவில் மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மிளகாய் தற்போது மகசூல் கொடுத்து வருகின்றன. செடிகளில் இருந்து பறிக்கப்படும் மிளகாய் பழங்களை வெயிலில் உலர்த்தி வத்தலாக்கி விவசாயிகள் விற்பனை செய்கின்றனர். நேற்று ஆர்.எஸ்.மங்கலத்தில் நடந்த மிளகாய் சந்தைக்கு வந்திருந்த மிளகாய் வத்தல்களை வெளியூர் வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். சந்தைக்கு கடந்த ஆண்டு விளைந்த மிளகாய் வத்தல் மூடைகளும், தற்போது மகசூலுக்கு வந்த மிளகாய் வத்தல்களும் விற்பனைக்கு வந்திருந்தன. இந்நிலையில், முதல் தர பெரிய வகை புதிய வத்தல் குவிண்டால் (ஒரு குவிண்டால் 100 கிலோ) ரூ.22 ஆயிரத்திற்கும், இரண்டாம் தர சிறிய வகை புதிய வத்தல் குவிண்டால் 19 ஆயிரத்திற்கும் விற்பனையாகியது. அதே நேரத்தில் பழைய வத்தல் குவிண்டால் அதிகபட்சம் ரூ.7,500க்கு விற்பனையானதால் பழைய வத்தல் விற்பனைக்கு கொண்டு வந்திருந்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். புதிய வத்தல் விற்பனைக்கு வந்தததால் பழைய வத்தலுக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.