மத்திய அரசின் ஓய்வூதியம் திட்டம் ஊராட்சி செயலாளர்கள் வரவேற்பு
ராமநாதபுரம்: மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஒய்வூதிய திட்டத்தை வரவேற்பதாக தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.மாநிலத் தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் அறிக்கை:மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் 25 ஆண்டுகள் பணி நிறைவு செய்தவர்களுக்கு முழு ஓய்வூதியம், அதற்கு குறைவான பணிக்காலத்தில் விகிதாச்சார அடிப்படையில் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்குவதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது.கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் 12,525 செயலாளர்கள் பணியிடங்கள் 1996ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் உருவாக்கப்பட்டு 28 ஆண்டுகள் முடிந்து விட்டது. 7 ஆண்டுகளுக்கு முன்பு சிறப்பு காலமுறை ஊதிய விகிதத்திற்கு மாற்றப்பட்டனர்.இந்த ஊதிய விகிதமானது ஊராட்சி ஒன்றியத்தில் பணியமர்த்தப்படும் பதிவு எழுத்தர் நிலையிலான ஊதியமாகும். ஆனால் அரசு பணியாளர்களுக்குரிய எந்த சலுகையும் அனுமதிக்கவில்லை.ஊராட்சி செயலாளர்களை தமிழக அரசு ஓய்வூதியதிட்டத்தில் சேர்க்கவில்லை.எனவே மத்திய அரசின் ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு பணியாளர்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் அறிவிக்க வேண்டும். தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை இணைக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.