வாலாந்தரவை ரயில்வே கிராசிங்கில் பிளாட்பாரம் சேதம்: வாகன ஓட்டிகள் அவதி
பெரியபட்டினம்,-வாலாந்தரவை அருகே பெரியபட்டினம் செல்லும் ரோட்டில் ரயில்வே கிராசிங்கில் பிளாட்பாரம் சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.ராமநாதபுரத்தில் இருந்து பெரியபட்டினம் 24 கி.மீ., தொலைவில் உள்ளது. ராமேஸ்வரம் செல்லும் மண்டபம் ரோட்டில் இருந்து வலது பக்கமாக வாலாந்தரவை - பெரியபட்டினம் இணைப்பு சாலையில் ரயில்வே கிராசிங் அமைந்துள்ளது. இங்கு பிளாட்பாரம் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளதால் ராமநாதபுரம் மற்றும் பெரியபட்டினம் நோக்கி செல்வோர் அடிக்கடி தவறி கீழே விழுந்து காயமடைகின்றனர். ரயில்வே கிராசிங் கேட் திறந்திருக்கும் நிலையில் அதன் அருகே உள்ள பள்ளத்தில் வாகன ஓட்டிகள் தடுமாறி சிறிய விபத்துக்கள் நடக்கிறது.தண்டவாளத்தின் நடுவே கொட்டப்பட்டுள்ள ஜல்லிக்கற்கள் மற்றும் பிளாட்பாரம் முறையாக பராமரிப்பு இல்லாததால் டூ வீலர் மற்றும் ஆட்டோ சிக்கிக்கொள்கின்றன. எனவே ராமநாதபுரம் மற்றும் ராமேஸ்வரம் ரயில்வே நிர்வாகத்தினர் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் பிளாட்பாரத்தை அகற்றிவிட்டு புதிய கிராசிங் பிளாட்பாரம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.