| ADDED : மார் 24, 2024 01:04 AM
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் வட மாநில பக்தர்கள் செலவுக்கு வைத்துள்ள பணத்தை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்வதால் அவதிப்படுகின்றனர்.தினமும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வட மாநில பக்தர்கள் ஏராளமான கார், வேன், பஸ்சில் சொந்த ஊரில் இருந்து 3000 முதல் 4000 கி.மீ., பயணித்து வருகின்றனர். பல ஆண்டுகளாக தரிசித்து திரும்பும் வட மாநில பக்தர்களுக்கு தற்போதைய தேர்தலில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இவர்களின் வாகனத்தை தமிழக தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டு செலவுக்கு வைத்திருக்கும் ஒரு லட்சத்திற்கும் குறைவான பணத்தை பறிமுதல் செய்கின்றனர். இதனால் பக்தர்கள் தொடர்ந்து பயணித்து கோயில் மற்றும் சொந்த ஊருக்கு திரும்பி செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ., பார்வையாளர் முரளிதரன் கூறுகையில், பறக்கும் படையின் மனிதாபமில்லாத நடவடிக்கையால் வட மாநில பக்தர்கள் தேர்தல் முடியும் வரை ராமேஸ்வரம் கோயிலுக்கு வர முடியாத அவல நிலை உள்ளது. மக்களின் ஆன்மிக நம்பிக்கைக்கு எதிராக பறக்கும் படை செயல்படுவது வேதனைக்குரியது. பல ஆயிரம் கி.மீ., பயணிக்கும் பக்தர்களின் அடையாளத்தை கண்டறிந்து அவர்களது கைச்செலவு பணத்தை பறிமுதல் செய்வதை நிறுத்த வேண்டும் என்றார்.